வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது. இனி அடிக்கடி சாலையில் மழைநீர், சாலையில் வெள்ள, சாலையில் பள்ளம் என செய்திகள் வருவது வழக்கமாகி விடும். இந்நிலையில், இதுபோன்ற நிலை வரக்கூடாது என்பதில் சென்னை மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது.
இதையொட்டி, மழைநீர் வடிகால் வாரியம், நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது. நேற்று பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்காத வகையில் மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
குறிப்பாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஜோதி வெங்கடாசலம் சாலை சந்திப்பு பகுதியில் தான் (போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே) தண்ணீர் அதிகளவு தேங்கும் என்பதால், அங்கு ராட்சத பள்ளம் வெட்டப்பட்டது. இந்த பள்ளம் சாலையின் மறுபுறம் வரை நீட்டிக்கப்பட்டது. பின்னர் அங்கிருக்கும் மழைநீர் வடிகால் வாய் இணைப்பு சீரமைக்கப்பட்டு, அருகிலேயே ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டன. இந்த குழாய்கள் சாலையின் மறுபுறம் வரையிலும் சுரங்கம் வழி போல நீட்டிக்கப்பட்டது.
இந்த ராட்சத குழாய்கள் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருக்கும் பாதாள சாக்கடைகளுடன் நேரடியாக இணைக்கப்பட்டு உள்ளன. இதனால் இனி மழைநீர் தேங்கும் பட்சத்தில், அது உடனடியாக குழாய்கள் வழியாக பாதாள சாக்கடைக்குள் சென்று சேர்ந்துவிடும். அதேபோல வடிகால்வாய்களும் சீரமைக்கப்பட்டன.
பணிகள் நேற்று முடிவடைந்த நிலையில், இன்று அதிகாரிகள் ஆய்வு செய்யவுள்ளனர்.
இதேபோல இன்னும் பல இடங்களில் இதேபோல ராட்சத குழாய்கள் பதிக்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது மழைக்காலத்துக்கு நல்ல பலனளிக்கும் என்பதால் மற்ற பகுதிகளுக்கும் விரைந்து செய்தால் நலம்.
Source: https://tamil.samayam.com/latest-news/chennai-news/chennai-corporation-working-focusly-to-face-northeast-rain-season/articleshow/78966982.cms