புயல் காரணமாக தெருக்களில் மக்கள் நடமாட்டம் இல்லை. மேலும், வெளியூர்களைச் சேர்ந்தவர்கள் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடவில்லை என்பதை சிசிடிவி மூலம் போலீஸார் உறுதிப்படுத்தினர். அதனால், அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் மீது போலீஸாரின் சந்தேகப் பார்வை விழுந்தது. இந்தச் சூழலில் பார்த்தசாரதியின் வீட்டின் அருகில் வசித்து வரும் ராஜேஷ் என்கிற புளிமூட்டை ராஜேஷ் (19), பிரகாஷ் (20), விக்கி என்கிற விக்னேஷ் (21) ஆகிய 3 பேரின் நடவடிக்கைகளில் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனால், அவர்களை போலீஸார் ரகசியமாகக் கண்காணித்தனர். அப்போது அவர்கள் மூன்று பேரும் பெட்டி, பெட்டியாக மதுபாட்டில்களை வாங்கி, நண்பர்களுக்கு மது விருந்து அளித்த தகவல் போலீஸாருக்கு கிடைத்தது.
வேலைக்குச் செல்லாத 3 பேருக்கும் இவ்வளவு பணம் கிடைத்தது எப்படி என போலீஸார் விசாரித்தனர். அப்போது விக்கி என்கிற விக்னேஷிடம் போலீஸார் விசாரித்தபோது, அவரின் பையில் தங்க வளையல் ஒன்றிருந்தது. அது, பார்த்தசாரதி மனைவியின் தங்க வளையல் எனத் தெரிந்தது. உடனடியாக தங்க வளையல் குறித்து போலீஸார் விக்கியிடம் விசாரித்தனர். அப்போது அவர், தன்னுடைய கூட்டாளிகள் புளிமூட்டை ராஜேஷ், பிரகாஷ் ஆகியோருடன் சேர்ந்து பார்த்தசாரதியின் வீட்டில் திருடியதை ஒப்புக் கொண்டார். அதையடுத்து அவர்கள் மூன்று பேரையும் போலீஸார் கைது செய்து 30 சவரன் தங்க நகைகள், 6 வெள்ளி விளக்குகள், வெள்ளி டம்ளர்கள், கைக்கடிகாரங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். புகார் கொடுத்த 3 மணி நேரத்தில் கொள்ளையர்களைக் கைது செய்தததோடு நகைகளைப் பறிமுதல் செய்த தனிப்படை போலீஸாரை சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வெகுவாகப் பாராட்டினார்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “கைதான ராஜேஷ் , பிரகாஷ், விக்கி ஆகிய 3 பேர்களில் பிரகாஷ் மட்டும் பழைய குற்றவாளி. மற்ற இருவரும் புதியவர்கள். புயல் காரணமாக வீட்டை பூட்டி விட்டுச் சென்ற நேரத்தில், இவர்கள் கைவரிசை காட்டியிருக்கின்றனர்” என்றனர்.
Source: https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-3-in-robbery-complaint-within-3-hours-of-complaint