தமிழகத்தில் நிரவ், புரெவி புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்தியக்குழு சென்னை வந்தது. முதல்வர் தலைமைச் செயலருடன் ஆலோசனை நடத்திய குழு நாளை சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆய்வு நடத்துகிறது. பின்னர் புயல் பாதித்த மற்ற பகுதிகளை ஆய்வு செய்கிறது.
தமிழகத்தில் நிரவ் புயல் பாதிப்பால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த இடங்களை ஆய்வு செய்ய மத்திய குழு தமிழகம் வருவதாக அறிவிக்கப்பட்டது. அதற்குள் புரெவி புயல் காரணமாக தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், குமரியில் மிகக் கனமழை பெய்ததால் பெரும்பாலான மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணை செயலாளர் அசுதோஷ் அக்னிஹோத்ரி தலைமையில் மத்திய விவசாயிகள் நலத்துறை இயக்குனர் மனோகரன், தேசிய நெடுஞ்சாலை துறை மண்டல அலுவலர் ரனஞ்ச் ஜெ சிங், நிதித்துறை இயக்குனர் சுமன், கிராமிய வளர்ச்சி துறை இயக்குனர் தரம்வீர் ஜா, மீன் வளர்ச்சி துறை இயக்குநர் பால் பாண்டியன், நீர் வழங்கல் துறை இயக்குநர் ஹர்ஸ்ஷா ஆகியோர் அடங்கிய குழு டெல்லியில் இருந்து சென்னை வந்தது.
மதியம் 3 மணிக்கு மேல் முதல்வர் தலைமைச் செயலருடன் ஆலோசனையில் ஈடுபட்ட குழு நாளைக் காலை சென்னையில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுகிறது. காலையில் முதலில் வேளச்சேரி ராம்நகரில் ஆய்வு செய்கிறது. அடுத்து பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் ஆய்வு செய்கிறது.
அடுத்து செம்மஞ்சேரி சுனாமி காலனியில் ஆய்வு செய்கிறது. அடுத்து செங்கல்பட்டு நூக்கம்பாளையத்தில் ஆய்வு செய்கிறது. 6-ம் தேதியில் இருந்து 7-ம் தேதி மாலை வரை பாதிக்கப்பட்ட இடங்களை 2 குழுக்களாக பிரித்து ஆய்வு செய்துவிட்டு சென்னை திரும்புகின்றனர்.
8-ம் தேதி தமிழக உயர் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்துகின்றனர். 4 நாள் ஆய்வை முடித்துவிட்டு அன்று மாலை டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கின்றனர். மத்திய அரசிடம் புயல் சேதம் குறித்து அறிக்கையை அவர்கள் அளிப்பார்கள்.
Source: https://www.hindutamil.in/news/tamilnadu/608554-study-on-storm-damage-central-team-arrived-in-chennai-tomorrow-in-chennai-chengalpattu-study.html