சென்னை: சென்னையில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்ட 2.19 லட்சம் பேரில் சனிக்கிழமை காலை நிலவரப்படி 2.12 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
சென்னையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி கரோனா பாதித்து 3,233 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்த எண்ணிக்கை ஒட்டு மொத்த பாதிப்பில் 1 சதவீதமாக உள்ளது.
சென்னையில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த புள்ளி விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதில், சென்னையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி ஒட்டுமொத்தமாக கரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 2,19,168 ஆக உள்ளது. இவர்களில் 2,12,031 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். கரோனா பாதித்தவர்களில் 3,904 பேர் பலியாகியுள்ளனர். இது 1.78 சதவீதமாகும்.
கரோனா பாதித்தவர்களில் 3,233 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது ஒட்டுமொத்த பாதிப்பில் 1% ஆகும். மேலும் சென்னையில் அனைத்து மண்டலங்களிலும் 400-க்கும் குறைவானோரே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கரோனா பாதித்தவர்களில் 61.36 சதவீதம் பேர் ஆண்கள், 38.64 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.
திருவிகநகர், அண்ணாநகர், கோடம்பாக்கம், அடையாறு ஆகிய நான்கு மண்டலங்களில் மட்டுமே 300க்கும் மேற்பட்டோர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவொற்றியூர், மணலி, சோலிங்கநல்லூர் மண்டலங்களில் நூற்றுக்கும் குறைவானவர்களே கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Source: https://www.dinamani.com/tamilnadu/2020/dec/12/chennai-out-of-219-lakh-people-affected-by-corona-212-lakh-are-cured-3522428.html