இதையடுத்து தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடித்தவர்களைப் போலீஸார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், சென்னை அசோக்நகரைச் சேர்ந்த சிவா(26), திருவொற்றியூரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்கிற ரவி (40), திருவண்ணாமலை, வந்தவாசியைச் சேர்ந்த சதீஷ் (31), சேலம் எடப்பாடியைச் சேர்ந்த அஜித்குமார் (26) எனத் தெரியவந்தது. அவர்கள் 5 பேரை போலீஸார் கைது செய்து 4 கார்கள், 4 செல்போன்கள், ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்தச் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட சென்னையைச் சேர்ந்த ஒருவரை போலீஸார் தேடிவருகின்றனர். அவரைப் பிடித்தால் மட்டுமே திருடப்பட்ட நகைகள், பணத்தை மீட்க முடியும் என போலீஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து கே.கே.நகர் போலீஸார் கூறுகையில், “கைதானவர்கள் அளித்த தகவலின்படி தொழிலதிபர் பாண்டியன் வீட்டில் அருகில் குடியிருக்கும் சிவா என்பவர்தான் இந்தக் கொள்ளைக்கு திட்டமிட்டிருக்கிறார். சிவா கொடுத்த தகவலின்படி குற்ற வழக்கில் தொடர்புடைய பூமிநாதன் என்பவர்தான் இந்தச்சம்பவத்துக்கு மூளையாக இருந்திருக்கிறார். திருவொற்றியூரில் உள்ள சலூன் கடையில்தான் திருடுவது குறித்து திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ஒருவர், முன்னாள் எம்.எல்.ஏ ஒருவரின் அண்ணன் மகன் என்ற தகவல் தெரியவந்திருக்கிறது” என்றனர்.
போலீஸ் போல நடித்த கொள்ளைக் கும்பல், அதற்கேற்ப காவல்துறையில் பயன்படுத்தும் வாகனத்தையே பயன்படுத்தியிருக்கின்றனர். சினிமாவைப் போல சென்னையில் பட்டப்பகலில்நடந்த இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Source: https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-fake-police-team-in-robbery-case