அதை நம்பிய ஜோசப், பணத்தை அனுப்பினார். பணம் அனுப்பிய தகவலை சுனிதாவிடம் கூற ஜோசப், போன் செய்த போது அவரின் போன் நம்பர் சுவிட்ச் ஆப் என பதில் வந்தது. அதன்பிறகு பலதடவை ஜோசப், தொடர்பு கொண்டபோது எந்தவித பதிலும் இல்லை. அதன்பிறகே ஜோசப், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதையடுத்து சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வலைச் சந்தித்து ஜோசப் புகாரளித்தார். அதன்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கூடுதல் துணை கமிஷனர் சரவணக்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வினோத், எஸ்.ஐ- மணிகண்டன், தலைமைக் காவலர்கள் சிவா, ஜெயந்தன் ஆகியோர் விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “தொழிலதிபர் ஜோசப், பணம் அனுப்பிய வங்கி கணக்கு விவரங்களை சைபர் க்ரைம் போலீஸாரின் உதவியோடு ஆய்வு செய்தோம். அப்போது சுனிதா என்ற பெயரில் முகநூல் மூலம் ஜோசப்பிற்கு மெசேஜ்களை அனுப்பியது பெண் அல்ல, ஆண் என்ற தகவல் தெரியவந்தது. அவரின் பெயர் கிறிஸ்டோபர் வில்மர் எனவும் நைஜிரீயாவைச் சேர்ந்தவர் என்றும் தெரிந்தது. இதையடுத்து மும்பை சென்ற சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கிறிஸ்டோபர் வில்மரைப் பிடித்தனர். பின்னர் அவரிடம் விசாரித்தபோது சென்னையில் மட்டும் 4 பேரிடம் பண மோசடி செய்தது தெரியவந்தது. அதன்பிறகு அவர் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்திவருகிறோம். விசாரணைக்குப்பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவுள்ளோம்” என்றனர்.
Source: https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-nigeria-youth-in-cheating-case