சென்னை திருவான்மியூர் பகுதியில் கோக்கைன் போதை பொருளுடன் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார். ரூ.2.75 லட்சம் மதிப்புள்ள 55 கிராம் கோக்கைன் போதை பொருள், ரூ.65,000 பணம் மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை திருவான்மியூர் காவல்நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் வசந்தராஜ், ராஜகோபால், முதல் நிலைக்காவலர் செல்வம் ஆகியோர் அடங்கிய காவலர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், அவர்கள் திருவான்மியூர் பேருந்து நிறுத்தம் அருகே கண்காணிப்பு பணியில் இருந்தனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வெளிநாட்டை சேர்ந்த நபரை பிடித்து, அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.
அதில் கோக்கைன் என்ற போதை பொருளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன்பேரில் அவரை கைது செய்து காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் பிடிபட்ட நபர் பெயர் ஆரிப் (46), என்பதும், இவர், நைஜீரியா நாட்டைசேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவரிடமிருந்து ரூ.2.75 லட்சம் மதிப்புள்ள 55 கிராம் கோக்கைன் போதை பொருள், ரூ.65,000 பணம் மற்றும் 1 செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் கைதுசெய்யப்பட்ட ஆரிப் மும்பையிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்து, சென்னையிலிருந்து பாண்டிச்சேரி செல்வதற்காக திருவான்மியூர் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தது தெரியவந்தது. விசாரணைக்குப் பின்னர், கைது செய்யப்பட்ட ஆரிப் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
Source: http://www.puthiyathalaimurai.com/newsview/89662/Chennai-A-Nigerian-man-has-been-arrested-with-cocaine