கனமழையால் வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை சாலைகள் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னையில் அதிகாலையில் இருந்து தொடர்ந்து பெய்த கனமழையால் சாலைகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தை ஒட்டிய வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, செங்கல்பட்டு,காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால், சென்னையில் ஒரு சில இடங்களிலும், புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களிலும் இன்னும் மழைநீர் வடியவில்லை.

இதனை வெளியேற்றும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சென்னையை அடுத்த மணலி புதுநகர் பகுதி வெள்ளத்தில் மிதக்கிறது. இந்தநிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்தநிலையில் சென்னையின் கோடம்பாக்கம், மயிலாப்பூர், மெரினா கிண்டி, வேளச்சேரி, சைதாப்பேட்டை, அடையார், கோட்டூர்புரம், புளியந்தோப்பு, சென்ட்ரல், பெரம்பூர், திரு.வி.க நகர், வியாசர்பாடி, முல்லைநகர், எம்.கே.பி நகர், மூலக்கடை, கொடுங்கையூர், மாதவரம் உள்ளிட்ட பகுதியில்  அதிகாலை 4 மணி முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

இந்தநிலையில், தொடர்ந்து பெய்த மழையால் சென்னையில் பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. வெள்ளத்தில் சென்னை தி.நகர் சாலைகள் தத்தளிக்கின்றன. சாலைகளில் ஓடும் தண்ணீரால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

தி.நகர் ஜி.என்.செட்டி சாலை, திருமலை சாலை உள்ளிட்ட சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.  மெரினா சர்வீஸ் சாலை, மயிலாப்பூர் மாதா சர்ச் சாலை, வடபழனி, தி.நகர் பகல்லா சாலையில் தண்ணீர் தேங்கி உள்ளது.

ஆங்காங்கே தேங்கியுள்ள தண்ணீரை மோட்டார் மூலம்  வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

உதயம் திரையரங்கம் நோக்கி செல்லும் போக்குவரத்து எதிர் திசையில் அனுமதிக்கப்படுகிறது. உதயம் சந்திப்பில் காசி முனையில் இருந்து அண்ணா சாலை செல்ல கனரக வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Source: https://www.dailythanthi.com/News/State/2021/11/22113307/Roads-in-Chennai-flooded-by-heavy-rains.vpf