சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் யார் என்று திமுக மேலிடம் முடிவெடுத்த பிறகு தான் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரியில் பொங்கலுக்கு முன்னதாக நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்பது தான் திமுக மேலிடத்தின் முடிவாக இருக்கிறது. ஆனால் சென்னை மேயர் யார்? என்று தற்போது வரை எந்த முடிவும் எடுக்க முடியாமல் இருப்பதால் ஏற்பட்டுள்ள குழப்பம் தான் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திமுக தலைவராக இருந்த கலைஞர், தனது அரசியல் வாரிசாக மு.க.ஸ்டாலினை 1980களின் இறுதியிலேயே சூசகமாகவும் சில சமயங்களில் வெளிப்படையாகவும் கூறிவிட்டார்.
வருகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. 7 மாவட்டங்களில் இன்று கன மழை கொட்டும்- சென்னை வானிலை மையம்
சென்னை மேயர் மு.க.ஸ்டாலின்
இதனை அடுத்து 1996ல் திமுக ஆட்சிக்கு வந்ததும் ஸ்டாலினை அரசியலுக்கு தீவிரமாக தயார்படுத்தும் பணியில் அவர் ஈடுபட்டார். கலைஞர் முதலமைச்சராக இருந்த போது ஸ்டாலினை அமைச்சராக்கியிருக்க முடியும். ஆனால் கலைஞர், ஸ்டாலினை அமைச்சராக்கவில்லை. மாறாக சென்னை மேயராக ஸ்டாலினை அமரவைத்தார் கலைஞர். இதற்கு காரணம் சென்னையை நிர்வகிப்பது என்பது கிட்டத்தட்ட தமிழகத்தையே நிர்வகிப்பதற்கு சமம் ஆகும். எப்படி தமிழக அரசுக்கு பட்ஜெட் போடப்படுகிறதோ? அதே போல் சென்னை மாநகராட்சிக்கும் பட்ஜெட் போடப்படும்.
சிங்காரச் சென்னை
இதன் காரணமாகவே கடந்த 1996ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஸ்டாலினை மேயர் தேர்தலில் போட்டியிட வைத்து சென்னையின் மேயராக்கினார். அத்தோடு மேயர் பதவி ஏற்ற ஸ்டாலின் தான் சிங்காரச் சென்னை எனும் திட்டத்தை கொண்டு வந்ததோடு பாலங்கள், வடிகால்கள் என தனது திறமையை காட்டினார். தற்போதும் கூட தனது சாதனை பட்டியலில் சென்னை மேயர் பதவியில் அவர் ஆற்றிய பணிகளை ஸ்டாலின் பட்டியலிட்டு வருகிறார்.
களத்திற்கு வந்த உதயநிதி
இந்த நிலையில் தான் மு.க.ஸ்டாலினின் அரசியல் வாரிசாக உதயநிதி ஸ்டாலின் முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறார். திமுக இளைஞர் அணிச் செயலாளர் பதவியில் உதயநிதி அமர்த்தப்பட்ட போதே அடுத்த வாரிசு அவர் தான் உறுதியாகிவிட்டது. ஏனென்றால் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராகும் வரை அவர் திமுகவின் இளைஞர் அணிச் செயலாளர் பதவியில் இருந்தார். அந்த வகையில் தனக்கு அடுத்து திமுக தலைவர் யார் என்பதை காட்டவே இளைஞர் அணிச் செயலாளர் பதவி உதயநிதிக்கு ஸ்டாலினால் வழங்கப்பட்டதாக அப்போது பேச்சுகள் அடிபட்டன.
சென்னை மேயர் உதயநிதி?
இதனிடையே சட்டப்பேரவை தேர்தலில் வென்று திமுக ஆட்சியை பிடித்துள்ளது. விரைவில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. திமுக தலைவரான ஸ்டாலின் சென்னை மேயராக தனது மகன் உதயநிதி தேர்வு செய்யப்பட வேண்டும் என்று விரும்புகிறார். அதாவது தனது தந்தை தனக்கு எப்படி சென்னை மேயர் பதவியை கொடுத்து அரசியலில் பக்குவப்படுத்தினாரோ? அதே போல் தனது மகன் உதயநிதிக்கு சென்னை மேயர் பதவியை கொடுத்து அரசியலில் வழிகாட்ட வேண்டும் என்று ஸ்டாலின் கருதுகிறார்.
அமைச்சர் கனவில் உதயநிதி?
அந்த வகையில் உதயநிதி சென்னை மேயராக தேர்வு செய்யப்பட வேண்டும் என்றால் அதற்கு நேரடியாகவே தேர்தலை நடத்த வேண்டும். ஏனென்றால் ஒரு வார்டில் போட்டியிட வைத்து வெற்றி பெற்று உதயநிதி மேயர் ஆவது அவரது இமேஜூக்கு நன்றாக இருக்காது. ஆனால் சென்னையை தவிர குறிப்பாக கோவை, சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகளில் நேரடி தேர்தலுக்கு அங்குள்ள திமுகவினரே கலக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதற்கிடையே சென்னை மேயர் பதவியில் உதயநிதிக்கு பெரிய அளவில் ஆர்வம் இல்லை என்கிறார்கள்.
திமுக மேலிடம் குழப்பம்
அமைச்சர் ஆக வேண்டும் என்பது தான் உதயநிதியின் விருப்பமாக உள்ளதாகவும் கூறுகிறார்கள். இதனால் தான் தந்தை ஸ்டாலின் விரும்பாத நிலையிலும் கூட சட்டப்பேரவை தேர்தலில் சேப்பாக்கத்தில் போட்டியிட்டு உதயநிதி வென்றார். அதாவது திமுக ஆட்சியில் அமைச்சராக வேண்டும் என்று தற்போதும் உதயநிதி ஆர்வமுடன் உள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் ஸ்டாலினோ, ஒரு இலாக்காவிற்கு அமைச்சராக இருப்பதால் உதயநிதியால் பெரிய அளவில் ஸ்கோர் செய்ய முடியாது என்றும் சென்னை மேயர் என்றால் தனித்தன்மையை காட்டலாம் என்றும் கருதுகிறார்.
தேர்தல் அறிவிப்பு எப்போது?
இதனால் தான் சென்னை மேயர் தேர்தல் விவகாரத்தில் எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாமல் திமுக மேலிடம் குழப்பத்தில் உள்ளதாகவும் இந்த விவகாரத்தில் முடிவு எட்டப்பட்ட அடுத்த நிமிடமே நகர்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிடும் என்றும் கூறுகிறார்கள்.
Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-mayor-post-udhayanidhi-stalin-wants-to-be-minister-440032.html