சென்னை: மீண்டும் மிதக்க துவங்கி உள்ளது சென்னை.. பெய்து வரும் கனமழை காரணமாக சென்னைவாசிகள் தத்தளித்து வருகிறார்கள்.. அதுதொடர்பான வீடியோக்களும், போட்டோக்களும் இணையத்தில் வெளியாகி வருகின்றன.
சென்னையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8.30 மணி வரை சென்னை ஏர்போர்ட்டில் 7 செமீ, கிண்டி, எம்ஜிஆர் நகர் ஆகிய இடங்களில் 6 செமீ, மயிலாப்பூர், தரமணி, சோழிங்கநல்லூர், சென்னை நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது.
நேற்று பகல் முழுவதும் சென்னையின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மழையின் தீவிரத்தைக் கருதி சென்னைக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது… இதில் புளியந்தோப்பு, திரு.வி.க.நகர். தியாகராயநகர், அண்ணா சாலை ரிச்சி தெரு, எழும்பூரில் உள்ள காவல் ஆணையர் அலுவலகம், உயர் நீதிமன்றம், கே.கே.நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மீண்டும் மழைநீர் தேங்கியுள்ளது.
அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் கனமழை.. எங்கெல்லாம் தெரியுமா?
நீடிக்கும்
சென்னை உட்பட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இனியும் மழை இருக்கும் என்கிறார்கள்.. சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களிடம் பேசியபோது இதுகுறித்து முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். “கடந்த 24 மணி நேரத்தில் 15 இடங்களில் மிக கனமழை 35 இடங்களில் கனமழை பெய்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.
அறிவுரை
வங்க கடல் பகுதிகள் அடுத்து 2 நாட்களுக்கு குமரிக்கடல், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது” என்றார்.
சென்னை
அந்த வகையில், சென்னையின் மிக முக்கிய பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.. சாலைகளில் வாகனங்கள் நின்று நின்று செல்கின்றன.. கார்களின் வீல்கள் நிரம்பும் அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.. இதனால் வண்டிகளை வாகன ஓட்டிகள் ஆங்காங்கே நிறுத்திவிடும் நிலைமை ஏற்பட்டு வருகிறது.. சில இடங்களில் இரு சக்கர வாகனங்களை தள்ளி கொண்டு செல்லவும் நேரிடுகிறது.
வேளச்சேரி
வேளச்சேரி, நேரு தெரு, ஈசிஆர் பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளுக்கும் தண்ணீர் புகுந்துவிட்டது.. இதில் நேரு தெருவில் சாக்கடை நீரும், மழைநீரும் ஒன்று கலந்து நிரம்பி கிடக்கின்றன.. இதில் ஒரு டூவீலரும் மிதந்து கொண்டிருக்கிறது.. அதேபோல், தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களும் மூழ்கி உள்ளன.. மரங்கள் ஒடிந்து வீடுகளின் முன்பகுதியிலேயே விழுந்து கிடக்கின்றன..
பூட்டப்பட்டது
2 நாள் மழைக்கே இவ்வளவு தண்ணீர் என்றால், இனி அடுத்தடுத்த மழைகள் வர உள்ள நிலையில், தேங்கி கிடக்கும் நீரை வெளியேற்ற குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர். மதுராந்தகம் அருகே செய்யூரில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்குள் மழை வெள்ளத்தால் தண்ணீர் புகுந்துவிட்டதால், சிகிச்சை பெற்று வந்த 20க்கும் மேற்பட்ட நோயாளிகள் ஆம்புலன்ஸ் மூலம் வேறு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.. டாக்டர்களும் நர்ஸ்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதுடன், அந்த அரசு மருத்துவமனையே இழுத்து பூட்டப்பட்டுவிட்டது.
மழை தண்ணீர்
அதேபோல கூடுவாஞ்சேரியில் அருவி போல மழைதண்ணீர் கொட்டிக் கொண்டிருக்கிறது.. அணைகளில் இருந்து நீர் பெருக்கெடுத்து விழுவது போல, மழைநீர் வேகத்துடன் கொட்டிக் கொண்டிருக்கிறது.. பார்ப்பதற்கு ஏதோ காட்டாற்று வெள்ளம்போலவே திகிலை கிளப்புகிறது.. இந்த வீடியோக்கள் அனைத்தையுமே சோஷியல் மீடியாவில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்… அதேசமயம் மாநகராட்சி ஊழியர்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணிகளிலும் துரிதமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-people-again-suffering-from-floods-and-viral-videos-on-socials-440521.html