சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகள் இன்று இரவு முதல் நாளை காலை வரை ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை போன்றவற்றால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட தமிழகம் முழுக்க கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக, பல மாவட்டங்களிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் விடுமுறை அறிவித்து வருகின்றன.
இன்னும் 5 மி.மீ. மழைதான்.. பெய்தால் நவம்பர் 2015 ரெக்கார்டை பிரேக் செய்யலாம்.. வெதர்மேன்!
மழை ஓய்ந்தது
இந்த நிலையில்தான் வெதர்மேன் பிரதீப் ஜான் உட்பட பல்வேறு தனியார் வானிலை ஆய்வாளர்களும் நவம்பர் 29ம் தேதியுடன் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை ஓய்ந்து விடும் என்று கணித்தனர். அதற்கு ஏற்ப இன்று காலை முதல் சென்னையில் வானம் மேக மூட்டமாக காணப்பட்டது. சூரியன் சுள் என்று அடிக்க தொடங்கியுள்ளது.
சென்னைக்கு எச்சரிக்கை
ஆனால், தமிழ்நாடு வெதர்மேன் மற்றொரு முக்கியமான எச்சரிக்கையை டுவிட்டர் வாயிலாக இன்று தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், இன்று இரவு முதல் நாளை காலை வரை ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். புஃல் எபெக்ட் மூலமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் மழை பெய்யக்கூடும். காற்று மேகக் கூட்டங்களை இழுத்து செல்லும் போது இந்த மழை பெய்யும்.
100 மி.மீ மழை கொட்டும்
சில நேரங்களில் இது போன்ற மழை ஆச்சரியங்களை கொடுக்கக் கூடியதாக இருக்கும். அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த நிலை உருவாகும்போது எதிர்பக்கம் மேகங்களை ஈர்க்கும் என்பதால், 50 முதல் 100 மில்லி மீட்டர் மழை அளவுக்கு கூட கொட்டி தீர்த்து உள்ளதை இதற்கு முன்பு நாம் பார்த்துள்ளோம். இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
மக்களே ஜாக்கிரதை
அதாவது, அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு இருந்தால் கூட, வங்கக் கடலோரம் உள்ள சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் இன்று இரவு முதல் அதிகாலை வரை ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பது இவரது பதிவின் சாராம்சமாக உள்ளது. முன்னதாக அவர், இன்று காலை வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ஒரு ஸ்பெல் மழை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு போன்ற பகுதிகளை சுற்றி அடிக்கும் வாய்ப்பு இருக்கிறது. அதன்பிறகு மழை குறையும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் பிறகு வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஆச்சரியப்படத்தக்க அளவில் மழை பெய்யக்கூடும் என்று எச்சரித்துள்ளார். இது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. எனவே மக்கள் மழை மற்றும் அது சார்ந்த பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். மெத்தனம் காட்ட முடியாது என்பது இவரது பதிவின் மூலமாக தெரியவரும் தகவல்.
Source: https://tamil.oneindia.com/news/chennai/tonight-to-morning-chennai-and-some-districts-need-to-be-careful-says-tamil-nadu-weatherman-pradeep-440823.html