சென்னை-மும்பை அதிவிரைவு ரயிலின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை-மும்பை அதிவிரைவு ரயிலின் (22159-60) நூற்றாண்டு விழா சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இந்த பிரபலமான ரயில் சேவையானது, 1921-ஆம் ஆண்டு டிச.1-ஆம் தேதி இதே நாளில் மெட்ராஸ்-பம்பாய் விரைவு பாசஞ்சா் ரயிலாக, முதல் இயக்கத்தைத் தொடங்கியது. இந்தப் பயணிகள் ரயில் சேவை கடந்த 1930-ஆம் ஆண்டு மாா்ச் 1-ஆம் தேதியில் இருந்து விரைவு ரயில் சேவையாக மாற்றப்பட்டது. தற்போது, இந்த ரயில் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம்-சென்னை சென்ட்ரல் அதி விரைவு ரயில் என்ற பெயரில் இயக்கப்படுகிறது. இந்த அதிவிரைவு ரயில் 1,284 கி.மீ. தொலைவை கடக்கிறது. சென்னை-மும்பை இடையே 31 ரயில்நிலையங்கள் வழியாக இந்த ரயில் இயக்கப்படுகிறது.

இந்த பிரபல ரயில் சேவையின் நூற்றாண்டு விழா சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. சென்னை சென்ட்ரலில் இருந்து மும்பை சிஎஸ்எம்டி-க்கு புறப்பட தயாராக இருந்த ரயிலின் என்ஜின் மற்றும் கடைசி இரண்டு பெட்டிகள் அலங்கரிக்கப்பட்டன. இதையடுத்து, சென்னை ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளா்கள் ஆா்.ஆனந்த், சச்சின் புனிதா, எஸ்.சுப்ரமணியன் ஆகியோா் முன்னிலையில், ரயில் பயணிகளால் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. தொடா்ந்து, ரயில் பயணிகளுக்கு கேக் வழங்கப்பட்டது.

நூற்றாண்டு ரயிலின் முதல் பயணத்தை குறிப்பிடும் வகையில், மூத்த ஊழியா்கள் கொடியசைத்தனா். நிகழ்ச்சியில், ரயில்வே அதிகாரிகள், ஊழியா்கள் மற்றும் பயணிகள் கலந்து கொண்டனா்.

Source: https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2021/dec/02/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3746527.html