சென்னை: சென்னையில் குடும்பத்தகராறில் மனைவி மற்றும் மாமியாரை கத்தியால் குத்தியதில் மாமியார் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் வியாசர்பாடியில் நிகழ்ந்துள்ளது.
12 எம்பிக்கள் சஸ்பெண்ட்: 4 கட்சிகளை அழைத்த சபாநாயகர்.. எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு-இன்று என்ன நடக்கும்
குடும்பத் தகராறில் கோபித்துக் கொண்டு மாமியார் வீட்டிற்கு சென்ற மனைவியை சமாதானப்படுத்த சென்றவர் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட கொடுமை சம்பவம் தலைநகரில் அரங்கேறியுள்ளது.
சம்பவ விவரம் இதுதான்-
மனைவியுடன் தகராறு
சென்னை வியாசர்பாடி அடுத்த அன்னை சத்யா நகரில் வசித்து வரும் லதா என்பவர் வீட்டு வேலை செய்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மகளும் 3 மகன்களும் உள்ளனர். 6 வருடங்களுக்கு முன்னர் மகள் சுதாவை மாதவரம் பால் பண்ணை பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவருக்கு மணமுடித்து கொடுத்துள்ளார். பாலாஜி பெயிண்டராக பணிபுரிந்து வரும் நிலையில் இந்த தம்பதித்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஆரம்பத்தில் சந்தோஷமாக சென்று கொண்டிருந்த இல்லற வாழ்க்கையில் பிரச்சனைகள் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. பாலாஜி வீட்டுச் செலவுக்கு பணம் தருவதில்லை என்றும் குடிபோதையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
சமரசத்தில் ஈடுபட்ட கணவர்
ஒரு கட்டத்தில் கணவரின் கொடுமைகளை பொறுக்க முடியாத சுதா தன்னுடைய குழந்தைகளை அழைத்து கொண்டு வியாசர்பாடியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். சுமார் ஒருவாரம் ஆகியும் மனைவி வீட்டிற்கு வராத நிலையில் எப்படியாவது சமாதானம் செய்து அழைத்து வந்துவிடலாம் என புறப்பட்டுள்ளார். இதை கேள்விப்பட்ட பாலாஜியின் நண்பர் அவரை தனியாக செல்லவேண்டாம் ஏதாவது அசம்பாவிதம் நடக்க வாய்ப்பு உள்ளது என அறிவுரை கூறியதாக தெரிகிறது. எனவே பாலாஜி தன்னுடைய நெருங்கிய நண்பரான பெரம்பூரை சேர்ந்த திவ்யநாத் என்பவரை மாமியார் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். நேற்று மதியம் வியாசர்பாடியில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்ற பாலாஜி மனைவியிடம் சமாதானம் பேசி உள்ளார்.
தகராறு முற்றியதில் இருவருக்கு கத்திக்குத்து
ஆனால் மனைவி சுதா எக்காரணத்தை கொண்டும் மீண்டு சேர்ந்து வாழ முடியாது என பாலாஜியிடம் திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பாலாஜி சற்றும் எதிர்பாராமல் கையில் இருந்த கத்தியை எடுத்து சுதாவை குத்த முயன்றார். அதை சுதா தடுத்தபோது அவரது கையில் வெட்டுப்பட்டுவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாமியார் லதா மகளை காப்பாற்ற முன்வந்தபோது அவரை சரமாரியா கத்தியால் குத்தியுள்ளார். இதனால் இடுப்பு மற்றும் வயிற்றில் ரத்த காயங்கள் ஏற்பட்டு மயங்கி விழுந்தார் சுதா. பெண்களின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் வந்து இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாமியாரை கொன்ற மருமகன் கைது
ஆனால் மாமியார் லதா மருத்தவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பாலாஜியின் மனைவி சுதாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினார். தகவல் அறிந்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு விரைந்த எம்.கே.பி. நகர் போலீசார் லதாவின் உடலை உடற்கூறு ஆய்வு செய்யுமாறு மருத்துவர்களுக்கு பரிந்துரைத்தனர். இதையடுத்து சுதாவிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் அவரது கணவர் பாலாஜி மற்றும் திவ்யநாத் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கொலை தொடர்பாக அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. தான் உண்டு வேலையுண்டு இருந்த திவ்யநாத் நண்பனுக்காக சமாதான தூதுவராக சென்ற நிலையில் பாலாஜியின் வன்முறைச் செயலால் அவரும் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். சமாதானம் செய்ய சென்ற தனக்கு இப்படி ஒரு தண்டனை தேவையா என தன்னைத் தானே நொந்து கொண்டு புலம்புவதாக அங்கிருப்பவர்கள் தெரிவித்தனர்.
Source: https://tamil.oneindia.com/news/chennai/son-in-law-kills-mother-in-law-in-chennai-vyasarpadi-442741.html