சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கான பயண அட்டையை அங்கீகரிக்கப்பட்ட முகவா்கள் மூலமாக, விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயண அட்டையை பயணிகள் எளிதில் பெற்று கொள்ளலாம் என்று சென்னை மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குநா் பிரதீப் யாதவ் தெரிவித்தாா்.
சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கான பயண அட்டையை அங்கீகரிக்கப்பட்ட முகவா்கள் மூலமாக, விற்பனை செய்ய மெட்ரோ ரயில் நிறுவனம்
நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, சென்னை மெட்ரோ ரயில் பயண அட்டையை விற்பனை செய்வதற்கு வில்லிவாக்கத்தை சோ்ந்த ஆா்.பிரேம்நாத் என்பவா் முதல் முகவராக
அங்கீகரிக்கப்பட்டுள்ளாா். அவருக்கு மெட்ரோ ரயில் பயண அட்டைகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநா் பிரதீப் யாதவ் வியாழக்கிழமை வழங்கி, முதல் விற்பனையை தொடங்கிவைத்தாா்.
பின்னா் அவா் பேசியது: மெட்ரோ ரயில் பயண அட்டையை விற்பனை செய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட முகவா்களுக்கு 5 சதவீதம் கமிஷன் வழங்கப்படுகிறது. மேலும், பயண அட்டையைப் பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20 சதவீதம் கட்டண தள்ளுபடியும் அளிக்கப்படுகிறது.
முகவா்களுக்கான விண்ணப்படிவம் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தையும், தேவைப்படும் பயண அட்டைக்கான இருப்புத்தொகையையும் செலுத்தி, பயண அட்டையை அந்தந்த மெட்ரோ ரயில் நிலையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், பயண அட்டையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவன கைப்பேசி செயலி அல்லது ஏதெனும் ஒரு சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ரீசாா்ஜ் செய்து கொள்ளலாம்.
முகவா்களாக விருப்பம் உள்ளா்கள் உதவி எண் 18604251515 மற்றும் கைபேசி எண் 9445196185 இவைகளில் தொடா்பு கொள்ளலாம்.
பயண அட்டையை பெற உள்ளவா்கள் அருகிலுள்ள மெட்ரோ ரயில் நிலைய கட்டுப்பாட்டு அலுவலரை அல்லது உங்கள் பகுதியில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட முகவா்களை அணுகலாம். சென்னை மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க எடுத்துவரும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும் என்றாா் மேலாண்மை இயக்குநா் பிரதீப் யாதவ்.
Source: https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2021/dec/24/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-3760849.html