சென்னை: சென்னை புறநகர் பகுதிகளில் கொடிகட்டிப் பறக்கும் கட்ட பஞ்சாயத்து, மாமூல் வசூல் ஆகியவற்றை ஒடுக்குவதற்காக என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் என அழைக்கப்படும் கூடுதல் எஸ்.பி. வெள்ளத்துரை தலைமையில் சிறப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது.
ரிஜிஸ்டர் செய்யுங்கள் ரூ.1000 மதிப்பிலான அமேசான் வவுச்சர் வென்றிடுங்கள்
சென்னை புறநகர் பகுதிகளில் கட்ட பஞ்சாயத்து, கஞ்சா, போதைப் பொருட்கள் விற்பனை என சட்டவிரோத செயல்கள் உச்சத்தில் இருக்கின்றன. சென்னை புறநகர் பகுதிகளில் தாதாக்களிடையே மோதல்களால் கொலைகள் சர்வ சாதாரணமாக நிகழ்கின்றன.
ரவுடிகள் ஆட்டம்
சென்னை புறநகர்களில் படப்பை குணா, சூர்யா என தாதாக்கள் ஆட்டம் தொடரவே செய்கிறது. ரவுடி சூர்யா அண்மையில் பாஜகவில் இணைந்தார். ரவுடி சூர்யா மீதான அச்சத்தால் அவரது மனைவி ஊராட்சி மன்ற துணைத் தலைவியாக எந்த எதிர்ப்பும் இல்லாமலேயே தேர்ந்தெடுக்கப்பட்டார். சூர்யாவின் மனைவி பதவி ஏற்பதற்கு முன்னதாக போலீசார் அவரை கைதும் செய்தது.
என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்
இந்த நிலையில் சென்னை புறநகர் பகுதிகளில் நடைபெறும் சட்டவிரோத செயல்களை ஒடுக்க என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ஸ்ட் என அழைக்கப்படும் கூடுதல் எஸ்.பி. வெள்ளத்துரை தலைமையில் சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது.
வீரமணி என்கவுண்டர்
வெள்ளத்துரை சப் இன்ஸ்பெக்ட்ராக இருந்த காலத்தில்தான் சென்னையை நடுநடுங்க வைத்த தாதா அயோத்தியா குப்பம் வீரமணி, சென்னை மெரினா கடற்கரையில் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். தற்போது திருவண்ணாமலை கூடுதல் எஸ்.பி.யாக பணியாற்றி வருகிறார் வெள்ளத்துரை. அவருக்கு கூடுதல் பொறுப்பாக சென்னை புறநகர் ரவுடிகளை ஒடுக்கும் பணி வழங்கப்பட்டுள்ளது.
தாதாக்களுக்கு முடிவு?
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வலம் வந்த பல ரவுடிகளும் தாதாக்களும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தஞ்சமடைந்துள்ளனர். தமிழகத்தின் பல இடங்களில் நிகழும் படுகொலைகளுக்கு ஸ்கெட்ச் போட்டு கூலிப்படையை அனுப்பி வருவதும் இந்த தாதாக்கள்தான். ரவுடிகள், தாதாக்களின் இந்த அட்டூழியங்களுக்கு முடிவு கட்டவே ஏடிஎஸ்பி வெள்ளத்துரை களமிறக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Source: https://tamil.oneindia.com/news/chennai/a-special-team-forms-under-adsp-vellathurai-for-chennai-outskirts-443751.html