வானிலை அறிக்கை குறித்தும், நேற்று சென்னையில் கனமழையை கணிக்கத் தவறியது ஏன் என்பது குறித்தும், சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், “சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிகக் கனமழை பெய்யும். கடலூர், புதுச்சேரி, காரைக்கால், விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு மிகக் கனமழை பெய்யலாம்” என்று கூறினார்.
மேலும், “இருக்கும் தரவுகளின் அடிப்படையில் தான் மழை குறித்துக் கணிக்கிறோம். நேற்றுப் பொறுத்தவரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டிருந்ததை நாம் முன்பே தெரிவித்திருந்தோம். நான் முன்பு கணித்திருந்ததன் படி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த மேலடுக்கு சுழற்சி கடற்பகுதியிலிருந்து அருகில் வரும்போது தான் நம்மால் சரியாகக் கணிக்க முடியும். உருவான சுழற்சி ஒரு குறிப்பிட்ட வேகத்தில் நகர்ந்து வரும். அப்படி வேகத்தை வைத்து கணித்ததில் இன்று மழை வரும் என்று எதிர்பார்த்தோம். ஒருசில நேரத்தில், நாம் எதிர்பார்த்திராத விதமாக வேகமாக நகர்ந்து விட்டது.
Source: https://www.vikatan.com/news/tamilnadu/how-did-the-experts-miss-the-chennai-rain-prediction