சென்னை : சென்னை ஐஐடி-யில் பணிபுரியும் 596 பேராசிரியர்களின் 19 பேர் மட்டுமே பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் ஆர்.டி.ஐ. சட்டத்தின் மூலம் வெளிவந்திருக்கிறது. மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் கல்வி, தொழில், அரசு நிறுவனங்களில் உள்ள பணி இடங்கள் சாதி அடிப்படையிலான ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்பட வேண்டும் என்பது அரசியல் அமைப்பு சட்டமாக உள்ளது.
ஆனால், ஒன்றிய அரசால் நடத்தப்படும் ஐஐடி எனப்படும் இந்திய தொழிநுட்பக்கழகத்தில் இடஒதுக்கீடு விதிகள் கடைபிடிக்கப்படுவது இல்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையி சென்னையில் ஐஐடி-யில் எந்த சமூகங்களை சேர்ந்த எத்தனை பேர் பேராசிரியர் பணிகளில் உள்ளனர் என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் ஒருவர் விண்ணப்பம் செய்திருந்தார். இதற்கு அளிக்கப்பட்ட பதிலில் சென்னை ஐஐடி-யில் மொத்தம் உள்ள 596 பேர் பேராசிரியர் பணியிடங்களில் பட்டியலினத்தை சேர்ந்த 19 பேர் மட்டுமே பேராசிரியர் பணியில் இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
2021 மார்ச் மாத நிலவரப்படி சென்னை ஐஐடி-யில் 515 உயர் சாதியினர் பேராசிரியர், இணை பேசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் உள்ளனர். OBC எனப்படும் இதர, பிற்படுத்தப்பட்டோர் பிரிவை சேர்ந்த பேராசிரியர்கள் 62 பேர், பட்டியலினத்தவர்களை பொறுத்தவரை SC பிரிவில் 16 பேராசிரியர்களும், ST பிரிவில் வெறும் 3 பேர் மட்டுமே பேராசிரியர் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, பழங்குடியினர் பிரிவில் ஒருவர் மட்டுமே பேராசிரியராகவும், இருவர் உதவி பேராசிரியர்கவும் பணியாற்றி வருவதாகவும் ஆர்.டி.ஐ. பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடி-யில் மொத்தம் உள்ள 596பேராசிரியர்கள் ஏற்கனவே 515பேர் உயர் சாதியினர் இருக்கும் நிலையில் பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர்சாதியினருக்கான 10% இடஒதுக்கீடு இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை இதர, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பட்டியலின சமூகத்திற்கு இழைக்கும் அநீதி என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றன.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MTk4MjPSAQA?oc=5