ஆசிரியை திட்டியதால் சக பணியாளர் தற்கொலை – நக்கீரன்

சென்னைச் செய்திகள்

 

 

அரசு பள்ளி ஆசிரியை திட்டியதால் சக பணியாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னை மாங்காட்டில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் சௌபாக்கியம்.  இதே பள்ளியின் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவராக உள்ளவரும், இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் தன்னார்வலருமான பியூலா (வயது 35). இவர் பள்ளிக்கு ஆசிரியர்கள் வராத நேரத்தில் தலைமை ஆசிரியரின் அனுமதியுடன் மாணவர்களுக்கு வகுப்புகளை எடுத்து வந்து உள்ளார்.

 

இந்நிலையில், பள்ளி ஆசிரியை சௌபாக்கியம் பியூலாவை தரக்குறைவாக திட்டியும், சமூக வலைத்தளத்தில் அவதூறாகப் பதிவிட்டும் உள்ளார். இதுகுறித்து பியூலா காவல்துறையிலும், பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளிடமும் புகார் தெரிவித்துள்ளார். ஆனால், ஆசிரியை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மீண்டும் பள்ளிக்கு வந்த பியூலாவை ஆசிரியை சௌபாக்கியம் திட்டி உள்ளார். இதனால் மனமுடைந்த பியூலா வீட்டுக்குச் சென்று தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் பள்ளிக்குச் சென்று ஆசிரியையைத் தாக்க முயன்றுள்ளனர். அங்கு விரைந்து வந்த போலீசார் பள்ளியின் தலைமை ஆசிரியரையும் சம்பந்தப்பட்ட ஆசிரியையையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் ஆசிரியை இளம்பெண்ணிடம் தரக்குறைவாகப் பேசியதும் அவதூறாக சமூக வலைதளங்களில் பதிவிட்டதும் உறுதி செய்யப்பட்டது. இதனால் ஆசிரியை சௌபாக்கியத்தைக் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMib2h0dHBzOi8vd3d3Lm5ha2toZWVyYW4uaW4vMjQtYnktNy1uZXdzL3RoYW1pemhhZ2FtL3NjaG9vbC10ZWFjaGVyLWlzc3VlLWNoZW5uYWktbWFuZ2FkdS1zY2hvb2wtdGVhY2hlci1hcnJlc3RlZNIBc2h0dHBzOi8vd3d3Lm5ha2toZWVyYW4uaW4vMjQtYnktNy1uZXdzL3RoYW1pemhhZ2FtL3NjaG9vbC10ZWFjaGVyLWlzc3VlLWNoZW5uYWktbWFuZ2FkdS1zY2hvb2wtdGVhY2hlci1hcnJlc3RlZD9hbXA?oc=5