சென்னை: ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கான மிகை ஊதியம் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனால் சுமார் 8 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுகின்றனர். தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திமுக பதவி ஏற்ற பிறகு பல்வேறு பதவி உயர்வுகள், பணி நியமனங்கள், சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக பொங்கலுக்கு சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கி முதல்வர் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்ட அறிக்கை: அரசின் நலத் திட்டங்களுக்கு, அச்சாணியாக விளங்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு எதிர்வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3,000 என்ற உச்சவரம்பிற்குட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும்.
தொகுப்பூதியம், சிறப்புக் கால முறை ஊதியம் பெறும் பணியாளர்கள், மற்றும் நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்து சில்லறை செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள் ஆகியோருக்கு ரூ.1,000 சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும். சி மற்றும் டி பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம பணியமைப்பு (முன்னாள் கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்கள்) மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு ரூ.500 பொங்கல் பரிசாக வழங்கப்படும். மேற்கூறிய மிகை ஊதியம், பொங்கல் பரிசு வழங்குவதன் மூலம் அரசிற்கு ரூ.221 கோடியே 42 லட்சம் செலவு ஏற்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த நடவடிக்கையால், 8 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுகின்றனர். மேலும் பல ஆயிரம் குடும்ப ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுகின்றனர். ஏற்கனவே பொங்கலுக்கு ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் மற்றும் பச்சரிசி, சர்க்கரை ஆகியவை வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தற்போது அரசு ஊழியர்களுக்கும் பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு ஊழியர்கள் சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MjU2OTTSAQA?oc=5