சென்னையில் ரூ.66.37 கோடி வரி பாக்கி- சொத்துவரி செலுத்தாத 499 பேரின் பட்டியலை மாநகராட்சி வெளியிட்டது – Maalaimalar தமிழ்

சென்னைச் செய்திகள்

சென்னை:

சென்னையில் உள்ள சொத்து உரிமையாளர்கள் 13 லட்சம் பேரிடம் இருந்து அரையாண்டுக்கு தலா ரூ.700 கோடி என ஆண்டுக்கு ரூ.1400 கோடி வரை சென்னை மாநகராட்சிக்கு வருமானம் கிடைக்கிறது.

காசோலை, பணம், ஆன்லைன் என பல்வேறு வகையில் சொத்துவரி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சொத்து வரியை ஒவ்வொரு அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் செலுத்துவோருக்கு 5 சதவீதம் அல்லது ரூ.5 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. தாமதமாக சொத்துவரி செலுத்துபவர்களுக்கு 2 சதவீத அபராத தொகை வசூலிக்கப்படுகிறது.

இந்த நிதியாண்டில் சொத்துவரி உயர்த்தப்பட்டதால் அபராத தொகை இல்லாமல் சொத்துவரி செலுத்த வருகிற ஜனவரி 12-ந்தேதி வரை சென்னை மாநகராட்சி அவகாசம் அளித்துள்ளது.

ஆனாலும் பெரும்பாலான சொத்து உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

இதையடுத்து சொத்து வரி செலுத்தாதவர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி http://chennaicorporation.gov.in/gcc/propertytax_revision என்ற இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது.

முதல் கட்டமாக ரூ.25 லட்சத்துக்குமேல் சொத்து வரி செலுத்தாத 38 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை சொத்துவரி செலுத்தாத 321 பேர், ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை சொத்துவரி செலுத்தாத 140 பேர் என மொத்தம் இதுவரை 499 பேரின் பட்டியலை சென்னை மாநகராட்சி இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது.

அதில் ஒவ்வொருவரும் எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்பதும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னையில் பல நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் நீண்ட காலமாக சொத்துவரி செலுத்தாமல் உள்ளனர்.

சொத்துவரி செலுத்துவதில் அவர்கள் அலட்சியம் காட்டி வருகிறார்கள். எனவே சொத்துவரி செலுத்தாத தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியலை சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறோம்.

தற்போது ரூ.66.37 கோடி வரை சொத்துவரி பாக்கி வைத்துள்ள 499 பேரின் பட்டியலை வெளியிட்டு உள்ளோம். அதன்மூலம் அந்த தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

அதன்பிறகும் சொத்து வரி செலுத்தாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். இந்த நடவடிக்கை மிக தீவிரமாக இருக்கும்.

எனவே சொத்துவரி செலுத்தாதவர்கள் உடனடியாக சொத்துவரி செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMihgFodHRwczovL3d3dy5tYWFsYWltYWxhci5jb20vbmV3cy9zdGF0ZS90YW1pbC1uZXdzLWNvcnBvcmF0aW9uLWhhcy1wdWJsaXNoZWQtYS1saXN0LW9mLTQ5OS1wZW9wbGUtd2hvLWhhdmUtbm90LXBhaWQtcHJvcGVydHktdGF4LTU1MzYyM9IBigFodHRwczovL3d3dy5tYWFsYWltYWxhci5jb20vYW1wL25ld3Mvc3RhdGUvdGFtaWwtbmV3cy1jb3Jwb3JhdGlvbi1oYXMtcHVibGlzaGVkLWEtbGlzdC1vZi00OTktcGVvcGxlLXdoby1oYXZlLW5vdC1wYWlkLXByb3BlcnR5LXRheC01NTM2MjM?oc=5