சென்னை: ஜனவரி 6ம் தேதி முதல் 22ம் தேதி வரை 46-வது சென்னை புத்தக காட்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்று பபாசி செயலாளர் முருகன் கூறினார். இது தொடர்பாக சென்னையில் பபாசி செயலாளர் முருகன் நிருபர்களிடம் கூறியதாவது: தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் சார்பாக 46வது சென்னை சர்வதேச புத்தக காட்சியானது நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜனவரி 6ம் தேதி முதல் 22ம் தேதி வரை 18 நாட்களுக்கு நடைபெற உள்ளது. மேலும் 18 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்க நாளான ஜனவரி 6ம் தேதி மாலை 5.30 மணிக்கு தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த புத்தக காட்சியானது நாள்தோறும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். மொத்தம் 800க்கும் மேல் அரங்குகள் அமைக்கப்படும். இந்த புத்தக காட்சியானது கடந்த ஆண்டை காட்டிலும் சிறப்பாக நடைபெறும். புத்தகக் காட்சி தொடக்க விழாவான ஜனவரி 6ம் தேதி கலைஞர், மு.கருணாநிதி பொற்கிழி விருது பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விருதாளர்களுக்கும், சிறந்த பதிப்பாளர்களுக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்குகிறார். இதுவரை 1500 அரங்குகளுக்கு முன்பதிவு வந்துள்ளது. ஆனால் இடவசதி குறைவாக உள்ளதால் 800அரங்குகள் அமைக்கப்படுவதோடு, மினி ரேக் சிஸ்டம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆண்டு திருநங்கைகளுக்கு ஒரு அரங்கு கொடுக்க முடிவு செய்துள்ளோம். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் சிறப்பாக வாசகர்களுக்கு ஏற்றவாறு திருப்தியாக இந்த புத்தக காட்சி இருக்கும். தமிழக அரசின் ஆதரவுடன் ஜனவரி 16 முதல் 18ம் தேதி வரை மூன்று நாட்கள் இதே வளாகத்தில் சென்னை சர்வதேச புத்தக காட்சி நடைபெறுகிறது. 40க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பதிப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர்.மேலும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவுத்திட்டமான புத்தக பூங்காவிற்கு தமிழக அரசு இடம் கொடுத்தால் அடுத்த புத்தகக் காட்சியை சிறப்பான முறையில் அங்கு நடத்த திட்டமிட்டுள்ளோம். புத்தகப் பூங்கா அமைக்க இடம் தர வேண்டி தமிழ்நாடு அரசிற்கு இந்த நேரத்தில் கோரிக்கை வைக்கிறோம். இவ்வாறு பபாசி செயலாளர் முருகன் கூறினார்.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MjU3OTTSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgyNTc5NC9hbXA?oc=5