சென்னை:
தமிழக அரசின் தொடக்க பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் என்கிற கோரிக்கையை வைத்து கடந்த 2014-ம் ஆண்டு முதல் போராடி வருகிறார்கள்.
கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து பணியை தொடங்கிய ஆசிரியர்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்பட்டு வருவதாகவும், ஆனால் இதற்கு ஒருநாள் முன்பாக பணியில் சேர்ந்தவர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்பட்டு வருவதாகவும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர். எங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களும், தாங்களும் ஒரே மாதிரியான வேலையையே செய்து வருகிறோம். ஆனால் ஊதியத்தில் மட்டும் அதிக மாறுபாடு உள்ளது என்று கூறி இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் என்கிற கோரிக்கையை கையில் எடுத்து கடந்த 8 ஆண்டுகளாக போராடி வருகிறார்கள்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் நேற்று உள்ளிருப்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் பங்கேற்க தமிழகம் முழுவதிலும் இருந்து கைக்குழந்தைகளுடனும் ஆசிரியைகள் பலர் வந்திருந்தனர். இவர்கள் நேற்று இரவு டி.பி.ஐ. வளாகத்திலேயே படுத்து உறங்கினார்கள்.
இன்று 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். 2 நாட்களாக சாப்பிடாமல் உடலை வருத்தி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதால் பலர் சோர்வாக காணப்பட்டனர்.
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் ஆங்காங்கே மரத்தடிகளில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களில் சிவகங்கையைச் சேர்ந்த வசந்தி, திருவண்ணாமலையைச் சேர்ந்த கவிதா ஆகிய 2 ஆசிரியைகள் இன்று காலையில் திடீரென மயக்கம் அடைந்தனர்.
அங்கு தயார் நிலையில் இருந்த ஆரம்புலன்சில் ஏற்றப்பட்டு இருவரும் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இது தொடர்பாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்க பொதுச்செயலாளர் ராபர்ட் கூறும் போது, “கடந்த 2018-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின் போது நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நேரத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் கோரிக்கை நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்திருந்தனர்.
தி.மு.க. தேர்தல் அறிக்கையிலும் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என கூறியிருந்தனர். எனவே தமிழக அரசு ஆசிரியர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் தமிழக அரசிடம் பலமுறை மனுவும் அளித்துள்ளனர்.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiaGh0dHBzOi8vd3d3Lm1hYWxhaW1hbGFyLmNvbS9uZXdzL3N0YXRlL3RhbWlsLW5ld3MtdGVhY2hlcnMtcHJvdGVzdC0ybmQtZGF5LWluLWNoZW5uYWktZHBpLWNvbXBsZXgtNTU0MDU50gFsaHR0cHM6Ly93d3cubWFhbGFpbWFsYXIuY29tL2FtcC9uZXdzL3N0YXRlL3RhbWlsLW5ld3MtdGVhY2hlcnMtcHJvdGVzdC0ybmQtZGF5LWluLWNoZW5uYWktZHBpLWNvbXBsZXgtNTU0MDU5?oc=5