திண்டிவனம்: திண்டிவனம் அருகே நேற்று வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர், சிறுவர்கள் உட்பட 28 பேர் படுகாயம் அடைந்தனர். சென்னை செங்குன்றம் பகுதியில் இருந்து 33 பக்தர்கள், மருவத்தூர் கோயிலுக்கு ேநற்று சாமி தரிசனம் செய்ய சென்றனர். தரிசனம் முடித்துவிட்டு, பிற்பகல் மருவத்தூரில் இருந்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள மயிலம் முருகன் கோயிலுக்கு புறப்பட்டனர்.
சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (35) என்பவர் வேனை ஓட்டி சென்றார். திண்டிவனம் கருணாவூர் என்ற இடத்தில் சாலையோரம் பழுதாகி நின்றிருந்த லாரியை கவனிக்காமல், அதன் அருகாமையில் சென்று வலது பக்கம் திடீரென திருப்பியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்தது. அப்போது பின்னால் வந்த மற்றொரு வேன், சாலையில் கவிழ்ந்த வேன் மீது மோதியது. இதில் வேனில் பயணம் செய்த 5 சிறுவர்கள் உட்பட 28 பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்து திண்டிவனம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் சாலையில் கவிழ்ந்த வேனில் டீசல் டேங்க் உடைந்து சாலையில் டீசல் சிதறியது. இதனால் மேலும் விபத்து நடக்காத வகையில் தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து டீசலை சுத்தம் செய்தனர். இச்சம்பவத்தால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MjYzMTnSAQA?oc=5