சென்னை: தாய்லாந்து நாட்டிலிருந்து நாகப்பாம்பு உள்பட53 கொடிய விஷபாம்புகள் கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து பயணிகள் விமானம் ஒன்று, நேற்று அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த 2 பயணிகள் பெரிய பிளாஸ்டிக் கூடைகளை எடுத்து வந்தனர். இதனால், அவர்கள் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். அவர்களது கூடைகளை, சுங்க அதிகாரிகள் திறந்துபார்த்தனர். அதில், தாய்லாந்து வனப்பகுதியில் காணப்படும் மலைப்பாம்பு குட்டிகள் 40, மற்றும் நாகப் பாம்புகளின் குட்டிகள் 13, அரியவகை குரங்கு குட்டிகள் 5, அபூர்வ உயிரினங்கள் 8 என மொத்தம் 66 உயிரினங்கள் மற்றும் விலங்குகள் இருந்தன.
இதையடுத்து சுங்க அதிகாரிகள் 2 பேரையும் ஒரு அறையில் அடைத்தனர். பின்னர், பெசன்ட் நகரில் உள்ள, ஒன்றிய வனவிலங்குகள் குற்றப்பிரிவு துறைக்கு தகவல் அனுப்பினார். ஒன்றிய வனவிலங்குகள் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், நடத்திய ஆய்வில் விலங்குகளில், அவை கொடிய விஷம் உடைய நாகப்பாம்புகள் என கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த விலங்குகள், தாய்லாந்து, வடஅமெரிக்கா, ஆப்பிரிக்கா வனப்பகுதிகளில் மட்டும் காணப்படுபவை. இதைப்போன்ற விலங்குகள், உயிரினங்கள் இந்தியாவுக்கு கொண்டுவர அனுமதி கிடையாது. இதையடுத்து இந்த 66 உயிரினங்களையும் புதன்கிழமை அதிகாலை சென்னையில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் செல்லும் பயணிகள் விமானத்தில், தாய்லாந்து நாட்டிற்கு திருப்பி அனுப்ப உத்தரவிட்டனர். கடத்தல் ஆசாமிகள் 2 பேரையும் கைது செய்தனர்.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MjYxMDXSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgyNjEwNS9hbXA?oc=5