பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாயுடன், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என்று தமிழக அரசு கடந்த 22-ந்தேதி அறிவித்தது.
பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம் பெறாதது குறித்து பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்க, தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில் ராதாகிருஷ்ணன் என்பவர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது:
பொங்கல் பரிசு தொகுப்புக்காக அரசு நல்ல விலைக்கு கரும்பை கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர். ஆனால் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம் பெறாததால் குறைந்த விலைக்கு கரும்பை விற்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக கரும்பு விவசாயிகளின் குடும்பத்தினர் திருப்தியாக பொங்கல் கொண்டாட முடியாத நிலையில் உள்ளனர்.
பொங்கல் பண்டிகையையும், கரும்பையும் பிரிக்க முடியாது என்பதால், பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க கோரி டிசம்பர் 24-ந்தேதி தமிழ்நாடு அரசிடம் மனு அளித்தேன். அதை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMid2h0dHBzOi8vd3d3Lm1hYWxhaW1hbGFyLmNvbS9uZXdzL3N0YXRlL2Nhc2UtZGVtYW5kaW5nLXBvbmdhbC1naWZ0LXdpdGgtc3VnYXJjYW5lLW1hZHJhcy1oaWdoLWNvdXJ0LWhlYXJpbmctdG9kYXktNTUzOTk40gF7aHR0cHM6Ly93d3cubWFhbGFpbWFsYXIuY29tL2FtcC9uZXdzL3N0YXRlL2Nhc2UtZGVtYW5kaW5nLXBvbmdhbC1naWZ0LXdpdGgtc3VnYXJjYW5lLW1hZHJhcy1oaWdoLWNvdXJ0LWhlYXJpbmctdG9kYXktNTUzOTk4?oc=5