மீண்டும் கனிமொழியின் சென்னை சங்கமம்: ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் – Indian Express Tamil

சென்னைச் செய்திகள்

கடந்த 2007ஆம் ஆண்டு தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியின் போது, சென்னை சங்கமம் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த விழாவில், சென்னையில் உள்ள பூங்காக்கள், மைதானங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் பாரம்பரிய நடனம், இசை மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

அதன்பிறகு ஆண்டுதோறும் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சி, 2011ஆம் ஆண்டின் அ.தி.மு.க. ஆட்சிக்கு பிறகு நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து, 2021ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சி அமைந்த பின்பு, கடந்த பொங்கல் பண்டிகையின் போது நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் சென்னை தீவுத்திடலில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் பத்து ஆண்டுகளுக்கு பிறகு, 2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை சங்கமம் நிகழ்ச்சியை கோலாகலமாக, கிராமிய கலைஞர்களின் பங்கேற்புடன் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதனால் வருகிற ஜனவரி 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. சென்னையில் உள்ள பூங்காக்கள், மைதானங்கள், கடற்கரைகள் என 16 இடங்களில் சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார், மேலும் சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்துவதற்காக சென்னையில் உள்ள சில பூங்காக்களை ஆய்வு செய்ய தி.மு.க. எம்.பி. கனிமொழி, மேயர் பிரியா ஆகியோர் முடிவெடுத்துள்ளனர்.

ஆய்வின் படி, சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 16 இடங்கள் என்னவென்றால்:

பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை சாலை, தி.நகர் நடேசன் பூங்கா, வளசரவாக்கம் ராம கிருஷ்ணன் நகர் மைதானம், கொளத்தூரில் உள்ள மாநகராட்சி மைதானம், ராயபுரத்தில் உள்ள ராபின்சன் விளையாட்டு மைதானம், மைலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா, செம்மொழி பூங்கா, நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானம், அண்ணாநகர் டவர் பூங்கா உள்ளிட்ட 16 இடங்களில் சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் கரகாட்டம், குயிலாட்டம், மயிலாட்டம், தெருக்கூத்து என பல்வேறு பாரம்பரிய நிகழ்ச்சிகள் இடம் பெறுகிறது.

4 நாட்களும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை 30 நிமிட இடைவெளியில் நடனம், இசை நிகழ்ச்சிகள் என்று பலவகையான நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. நாட்டுப்புற மற்றும் பாரம்பரிய கலைகள், பிற மாநில நடனங்கள் ஆகியவற்றின் கலவையாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் கலை நிகழ்ச்சிகளுடன் உணவு திருவிழாவும் நடக்கிறது. கருப்பட்டி, இருட்டுக்கடை அல்வா, கடாய் அல்வா, தலப்பாகட்டி உள்ளிட்ட பாரம்பரிய உணவுகளும் இந்த திருவிழாவில் மக்களால் அணுகமுடியும்.

மேலும் இந்த இடங்களில் நிகழ்ச்சி நடத்துவதற்கு ஏதுவாக மேடைகள், தரமான குடிநீர் வசதி, கழிப்பறைகளை ஆகியவை அமைப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiWWh0dHBzOi8vdGFtaWwuaW5kaWFuZXhwcmVzcy5jb20vdGFtaWxuYWR1L2NoZW5uYWktc2FuZ2FtYW0tZXZlbnQtb24tamFuLTE0dGgtMjAyMy01Njc4MDQv0gFeaHR0cHM6Ly90YW1pbC5pbmRpYW5leHByZXNzLmNvbS90YW1pbG5hZHUvY2hlbm5haS1zYW5nYW1hbS1ldmVudC1vbi1qYW4tMTR0aC0yMDIzLTU2NzgwNC9saXRlLw?oc=5