சென்னை:
தி.மு.க. ஆட்சியின் போது கடந்த 2007-ம் ஆண்டு சென்னை சங்கமம் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. பொங்கல் பண்டிகையின் போது நடத்தப்பட்ட இந்த சென்னை சங்கமம் விழாவின் போது சென்னையில் உள்ள பூங்காக்கள், மைதானங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் பாரம்பரிய நடனம், இசை மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
ஆண்டுதோறும் நடத்தப்பட்ட இந்த சென்னை சங்கமம் நிகழ்ச்சி கடந்த 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைந்ததை தொடர்ந்து கடந்த பொங்கல் பண்டிகையின் போது நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் சென்னை தீவுத்திடலில் இந்த கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி கிராமிய கலைஞர்கள் பங்கேற்கும் சென்னை சங்கமம் நிகழ்ச்சியை கோலாகலமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
வருகிற 14-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. சென்னையில் உள்ள பூங்காக்கள், மைதானங்கள், கடற்கரைகள் என 16 இடங்களில் சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
சென்னை சங்கமம் நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த நிலையில் சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்துவதற்காக சென்னையில் உள்ள சில பூங்காக்களை தி.மு.க. எம்.பி. கனிமொழி, மேயர் பிரியா ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இதையடுத்து சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்துவதற்காக 16 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.
கொளத்தூரில் உள்ள மாநகராட்சி மைதானம், ராயபுரத்தில் உள்ள ராபின்சன் விளையாட்டு மைதானம், மைலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா, செம்மொழி பூங்கா, நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானம், அண்ணாநகர் டவர் பூங்கா, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை சாலை, தி.நகர் நடேசன் பூங்கா, வளசரவாக்கம் ராம கிருஷ்ணன் நகர் மைதானம் உள்ளிட்ட 16 இடங்களில் சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கரகாட்டம், குயிலாட்டம், மயிலாட்டம், தெருக்கூத்து உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய நிகழ்ச்சிகள் இடம் பெறுகிறது. 4 நாட்களும் மாலை 6 முதல் இரவு 9 மணிவரை 30 நிமிட இடைவெளியில் நடனம், இசை நிகழ்ச்சி உள்ளிட்ட நாட்டுப்புற மற்றும் பாரம்பரிய கலைகள், பிற மாநில நடனங்கள் ஆகியவற்றின் கலவையாக நடத்தப்படுகிறது.
சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் உணவு திருவிழாவும் நடக்கிறது. கருப்பட்டி, இருட்டுக்கடை அல்வா, கடாய் அல்வா, தலப்பாகட்டி உள்ளிட்ட பாரம்பரிய உணவுகளும், உணவு பொருள் கடைகளும் இந்த உணவு திருவிழாவில் அமைக்கப்படுகின்றன.
மேலும் இந்த இடங்களில் நிகழ்ச்சி நடத்துவதற்கு ஏதுவாக மேடைகள் அமைக்கப்படுகின்றன. தரமான குடிநீர் வழங்குவதற்கும், நடமாடும் கழிப்பறைகளை அமைப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவதற்காக கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராமச்சந்திரன் ஆகியோர் அடங்கிய வழிகாட்டுதல் குழு அமைக்கப்படுகிறது.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiYWh0dHBzOi8vd3d3Lm1hYWxhaW1hbGFyLmNvbS9uZXdzL3N0YXRlL3RhbWlsLW5ld3MtY2hlbm5haS1zYW5nYW1hbS1ldmVudC1zdGFydC1vbi1qYW4tMTR0aC01NTQ4MjnSAWVodHRwczovL3d3dy5tYWFsYWltYWxhci5jb20vYW1wL25ld3Mvc3RhdGUvdGFtaWwtbmV3cy1jaGVubmFpLXNhbmdhbWFtLWV2ZW50LXN0YXJ0LW9uLWphbi0xNHRoLTU1NDgyOQ?oc=5