பிரதமர் மோடி தாயார் மறைவு; தமிழக பாஜ அலுவலகங்களில் அஞ்சலி: சென்னையில் கூட்டணி … – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் நேற்று மரணமடைந்தார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அவரது உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடந்தது. ஹீராபென் படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவரது படத்திற்கு பாஜ சார்பில் துணை தலைவர்கள் சக்கரவர்த்தி, வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன், மாநில செயலாளர் டால்பின் ஸ்ரீதர், கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, முன்னாள் எம்பி ஜெயவர்தன், முன்னாள் எம்எல்ஏக்கள் கே.பி.கந்தன், விருகை ரவி, முன்னாள் பகுதி செயலாளர் டி.சிவராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தமாகா சார்பில் தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், பொது செயலாளர் சக்தி வேல் தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அவர்களுடன் நிர்வாகிகள் ஜவஹர்பாபு, ராஜன் எம்.பி.நாதன், முனவர் பாட்சா, கோவிந்தசாமி, சைதை மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்ட பாஜ கூட்டணி கட்சி தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும், அனைத்து பாஜ மாவட்ட அலுவலகம் மற்றும் மண்டல அளவிலான இடங்களில் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MjcxMDDSAQA?oc=5