கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த போது, சிகிச்சை பணியில் ஈடுபடுத்தப்பட்ட அரசு மருத்துவர்கள், தனிமைப்படுத்திக் கொண்டு, சுழற்சி முறையில், பணியில் ஈடுபட ஏதுவாக, சுகாதாரத்துறை சார்பில் ஓட்டல்களில் அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டன. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்த வெற்றிசெல்வன், தியாகராய நகரில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி இருந்தார். அந்த விடுதியில் தங்கி இருந்த போது, மருத்துவர் வெற்றிசெல்வன், பெண் மருத்துவர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி முகமது ஃபாருக், பாலியல் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறினார். பின்னர், மருத்துவர் வெற்றி செல்வனுக்கு பத்தாண்டு சிறை தண்டனையும் , 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். அபராத தொகை 25 ஆயிரம் ரூபாயை பாதிக்கப்பட்ட மருத்துவருக்கு இழப்பீடாக வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMipwFodHRwczovL3d3dy50aGFudGhpdHYuY29tL2xhdGVzdC1uZXdzL3NleHVhbC1oYXJhc3NtZW50LW9mLWEtZmVtYWxlLWRvY3Rvci0xMC15ZWFycy1pbi1wcmlzb24tZm9yLWEtZmVsbG93LWRvY3Rvci1zcGVjaWFsLWNvdXJ0LWZvci13b21lbi1jaGVubmFpLWFjdGlvbi12ZXJkaWN0LTE1OTEyOdIBqwFodHRwczovL3d3dy50aGFudGhpdHYuY29tL2FtcC9sYXRlc3QtbmV3cy9zZXh1YWwtaGFyYXNzbWVudC1vZi1hLWZlbWFsZS1kb2N0b3ItMTAteWVhcnMtaW4tcHJpc29uLWZvci1hLWZlbGxvdy1kb2N0b3Itc3BlY2lhbC1jb3VydC1mb3Itd29tZW4tY2hlbm5haS1hY3Rpb24tdmVyZGljdC0xNTkxMjk?oc=5