சென்னையில் தொடரும் ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம்! – தினமணி

சென்னைச் செய்திகள்

கரோனா காலத்தில் ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

கடந்த 2 ஆண்டுகளில் கரோனா தொற்று அதிகரித்ததையடுத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த முறையில் சுமார் 2,300-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டனர்.

இந்நிலையில் இவர்களின் பணிக்கால ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் பணி நீட்டிப்பு இல்லை என தமிழக அரசு கடந்த சனிக்கிழமை ஆணை வெளியிட்டது. இதற்கு ஒப்பந்த செவிலியர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது.

மேலும் சேலத்தில் மூன்று நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செவிலியர்களுக்கு இன்று அனுமதி வழங்கப்படாததால், மாற்று வழியில் போராட்டம் தொடரும் என தெரிவித்திருந்தனர்.

இதையும் படிக்க | ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவத்துறை அலுவலகத்தில் திடீரென திரண்ட நூற்றுக்கணக்கான செவிலியர்கள் தங்களின் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

போராட்டம் கைவிடக் கோரி செவிலியர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக, பணி நீட்டிப்பு பெறாத ஒப்பந்த செவிலியர்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாற்றுப்பணி வழங்கப்படும் என்றும் அதேநேரத்தில் பணி நிரந்தரம் செய்வதற்கான வாய்ப்பு குறைவு என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்தது குறிப்பிடத்தக்கது.
 

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMigwFodHRwczovL3d3dy5kaW5hbWFuaS5jb20vYWxsLWVkaXRpb25zL2VkaXRpb24tY2hlbm5haS9jaGVubmFpLzIwMjMvamFuLzA0L2NvbnRyYWN0LW51cnNlcy1wcm90ZXN0LWNvbnRpbnVlcy1pbi1jaGVubmFpLTM5Nzg0NTcuaHRtbNIBgAFodHRwczovL20uZGluYW1hbmkuY29tL2FsbC1lZGl0aW9ucy9lZGl0aW9uLWNoZW5uYWkvY2hlbm5haS8yMDIzL2phbi8wNC9jb250cmFjdC1udXJzZXMtcHJvdGVzdC1jb250aW51ZXMtaW4tY2hlbm5haS0zOTc4NDU3LmFtcA?oc=5