சென்னை சங்கமம்-2023: ஜன.13-ல் முதல்வர் தொடக்கி வைக்கிறார் – தினமணி

சென்னைச் செய்திகள்

கோப்புப்படம்

தமிழக அரசின் கலை, பண்பாட்டுத் துறை சாா்பில் சென்னை சங்கமம் நிகழ்ச்சி ஜன 13-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்கவுள்ளாா்.

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது உரையில் தெரிவித்திருப்பதாவது:

“சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா” தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் பல்வேறு இடங்களில் வரும் ஜனவரி 13ஆம் நாள் தொடங்கி 17ஆம் நாள் வரையில் அரசு சார்பில் நடைபெறவிருக்கிறது.

வரும் ஜனவரி 13, வெள்ளிக்கிழமையன்று, சென்னை, தீவுத் திடலில் “சென்னை சங்கமம்-2023” நிகழ்வை நான் தொடங்கி வைக்கிறேன். 16 இடங்கள், 60-க்கும் மேற்பட்ட கலைநிகழ்ச்சிகள், 600-க்கும் மேற்பட்ட மண்ணின் கலைஞர்களை ஒன்றிணைத்து, மீண்டும் வருகிறது “சென்னை சங்கமம்”. 

பறையாட்டம், கரகாட்டம், மலைவாழ் மக்களின் கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட நம் பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகள் நடக்கவிருக்கின்றன. இதோடு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தனிச் சிறப்பான உணவு வகைகள் உணவுத் திருவிழாவில் இடம்பெறுகின்றன. 

இலக்கியத் திருவிழாவும் நடைபெற உள்ளது. நம் தமிழ் மண்ணையும்,  மக்களையும், மக்களின் கதைகளையும் பேசும் இந்தக் கலைகளை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பதில் அரசு பெருமிதம் கொள்கிறது. 

இதையும் படிக்க: தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை மீறுவதை மோடி அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்: கே.எஸ். அழகிரி

‘தமிழர் என்று ஓர் இனம் உண்டு, தனியே அவருக்கு ஒரு குணமுண்டு’. ‘கலைகள் யாவிலும் வல்லவனாம், கற்றவர் எவர்க்கும் நல்லவனாம்’. இந்த மாபெரும் மக்கள் திருவிழாவிற்கு அனைவரும் வாருங்கள்! வாருங்கள்! நம்ம ஊரு திருவிழாவில் சந்திப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMieWh0dHBzOi8vd3d3LmRpbmFtYW5pLmNvbS90YW1pbG5hZHUvMjAyMy9qYW4vMDQvY2hlbm5haS1zYW5nYW1hbS0yMDIzLWNoaWVmLW1pbmlzdGVyLXdpbGwtaW5hdWd1cmF0ZS1vbi1qYW4xMy0zOTc4NDg3Lmh0bWzSAXZodHRwczovL20uZGluYW1hbmkuY29tL3RhbWlsbmFkdS8yMDIzL2phbi8wNC9jaGVubmFpLXNhbmdhbWFtLTIwMjMtY2hpZWYtbWluaXN0ZXItd2lsbC1pbmF1Z3VyYXRlLW9uLWphbjEzLTM5Nzg0ODcuYW1w?oc=5