சென்னை,
சென்னை ஐ.ஐ.டி., பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் (டி.ஆர்.டி.ஓ.) இணைந்து நாட்டின் தற்காப்பு மற்றும் பாதுகாப்பு தேவைகளுக்கு மேம்பட்ட தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஆராய்ச்சி மையத்தை இயக்கி வருகிறது. ஆரம்பத்தில் டி.ஆர்.டி.ஓ.வால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், தற்போது சென்னை ஐ.ஐ.டி.யால் கையகப்படுத்தப்பட்டு இடைநிலை ஆராய்ச்சி குழுவினரை கொண்ட ‘உயர் சிறப்பு மையமாக’ மாற்றப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மனிதகுலத்துக்கு பயனளிக்கும் ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
டி.ஆர்.டி.ஓ. தொழில்கல்வி-ராமானுஜன் உயர்சிறப்பு மையம் என்று அழைக்கப்படும் இந்த மையம், பாதுகாப்புக்கான மேம்பட்ட தொழில்நுட்பங்களில் இலக்கை நோக்கிய ஆராய்ச்சியை மேற்கொள்வதுடன் அதிநவீன தொழில்நுட்பங்களை கண்டறியக்கூடிய உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி மையத்தை உருவாக்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்டு உள்ளது. அத்துடன், பாதுகாப்புத்துறையில் ‘சுயசார்பு இந்தியா’ திட்டத்தில் மிகப்பெரிய பங்களிப்பையும் இந்த மையம் வழங்கும்.
இந்த மையத்தின் விரிவான இலக்குகள் குறித்து, சென்னை ஐ.ஐ.டி. டீன் (தொழில்துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சி) பேராசிரியர் மனு சந்தானம் கூறும்போது, “எதிர்கால டி.ஆர்.டி.ஓ. திட்டங்களுக்கு உதவும் வகையில் டி.ஆர்.டி.ஓ. உடன் அடையாளம் காணப்பட்ட ஆராய்ச்சி பணிகளில் சென்னை ஐ.ஐ.டி. முக்கிய பங்களிப்பை வழங்கும்” என்றார்.
டி.ஆர்.டி.ஓ. தொழில் கல்வி-ராமானுஜன் உயர்சிறப்பு மையத்தின் இயக்குனர் ஓ.ஆர்.நந்தகோபன் கூறும்போது, “நமது ஆயுத படையினருக்கு தேவையான அதிநவீன தொழில்நுட்பங்களை மேம்படுத்தும் பணியை இந்த மையம் மேற்கொள்ளும்” என்றார்.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiiwFodHRwczovL3d3dy5kYWlseXRoYW50aGkuY29tL05ld3MvU3RhdGUvZHJkby10by1kZXZlbG9wLXRlY2hub2xvZ2llcy1mb3ItbmF0aW9uYWwtc2VjdXJpdHktd29ya2luZy1pbi1jb2xsYWJvcmF0aW9uLXdpdGgtaWl0LWNoZW5uYWktODcxNjIz0gEA?oc=5