சென்னை: சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 18 சென்னை பள்ளிகளில் ஒரு வகுப்பறைக்கு ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் காட்சிப்படுத்தும் சாதனம் மற்றும் வரைப்பட்டிகை ஆகிய ஜப்பான் டிஜிட்டல் தொழில்நுட்ப சாதனங்கள் ரியான் டெக் நிறுவனத்தின் சார்பில் இலவசமாக வழங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக, சிந்தாதிரிப்பேட்டை சென்னை உயர்நிலைப்பள்ளி, கொய்யாத்தோப்பு சென்னை தொடக்கப்பள்ளி மற்றும் சென்னை உயர் நிலைப்பள்ளி, இருசப்ப தெரு சென்னை உயர் நிலைப்பள்ளி மற்றும் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சென்னை நடுநிலைப்பள்ளி ஆகிய 5 பள்ளிகளில் ரியான் டெக் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்ட ஜப்பான் டிஜிட்டல் தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தி கற்றல், கற்பித்தல் முறை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதை தொடங்கி வைக்கும் விதமாக, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சிந்தாதிரிப்பேட்டை, மேற்கு கூவம் ஆற்றுச்சாலையில் உள்ள சென்னை உயர்நிலை பள்ளியில் தொடங்கி வைத்தார். இந்த தொழில்நுட்ப முறைகளை பள்ளிகளில் பயன்படுத்துவதன் மூலம் ஆசிரியர்களின் கற்பித்தல் முறை, மாணவர்களின் கற்றல் முறை எளிதாக்கப்பட்டு, பொதுத்தேர்வுகள் மற்றும் போட்டி தேர்வுகளை சுலபமாக மாணவர்கள் எதிர்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், மேயர் ஆர்.பிரியா, நிலைக்குழு தலைவர் (பணிகள்) சிற்றரசு, மண்டல குழு தலைவர்கள் எஸ்.மதன்மோகன், பி.ஸ்ரீராமுலு, மாமன்ற உறுப்பினர் ரா.ஜெகதீசன், ரியான் டெக் நிறுவன இயக்குநர் ஸ்டீபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04Mjg5MTDSAQA?oc=5