சென்னையில் உள்ள சாலைகளில் கேட்பாரற்று நிறுத்தப்பட்ட 20 வாகனங்கள் பறிமுதல் – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் உள்ள சாலைகளில் நீண்ட நாட்கள் கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த 20 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். சென்னை மாநகர காவல் எல்லையில் சாலையோரம் மற்றும் தெருக்களில் நீண்ட நாட்கள் யாரும் உரிமை கோராமல் கேட்பாரற்று நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், சென்னை மாநகரம் முழுவதும் நேற்று முன்தினம் போலீசார் சாலையோரம், தெருக்களில் கேட்பாரற்று நிறுத்தப்பட்ட வாகனங்களை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். அதன்படி, முதன்மை சாலைகளில் நீண்ட நாட்கள் நிறுத்தப்பட்டிருந்த 8 வாகனங்கள் மற்றும் தெருக்களில் நிறுத்தப்பட்டிருந்த 12 வாகனங்கள் என மொத்தம் 20 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட வாகன பதிவு எண்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி 10 வாகனங்களை உரிமையாளர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். மேலும் யாரும் உரிமை கோராத 10 வாகனங்களின் உரிமையாளர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை மாநகர காவல்துறையில் சாலைகளில் கேட்பாரற்று நிறுத்தப்பட்ட 272 வாகனங்கள் பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MjkzNDPSAQA?oc=5