சென்னை: மின்வாரிய ஊழியர்கள் இன்று நடத்துவதாக அறிவித்திருந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (ஜன.10) வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழக (டான்ஜெட்கோ) ஊழியர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். இதற்கு தடை விதிக்க கோரி சென்னையை சேர்ந்த சரவணன், ஏழுமலை ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.
அதில், ‘மின்வாரிய ஊழியர் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக டான்ஜெட்கோ நிர்வாகம் ஏற்கெனவே பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இந்த போராட்டம் சட்டவிரோதமானது. பொங்கல் பண்டிகைநெருங்கும் சூழலில் மின் ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தால், மக்கள் பாதிக்கப்படுவார்கள்’ என்று தெரிவித்திருந்தனர். பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன், வழக்கறிஞர் மனோகரன் ஆஜராகி, “வேலைநிறுத்தம் செய்வதாக இருந்தால், 6 வாரங்களுக்கு முன்பு முறைப்படி அறிவிக்கை வெளியிட வேண்டும். அதுபோல எந்த அறிவிக்கையும் அவர்கள் வெளியிடவில்லை. தொழில் தகராறு சட்டத்தின்படி, சமரச பேச்சுவார்த்தை தொடங்கியபிறகு, வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுக்க முடியாது” என்று வாதிட்டனர்.
தமிழக அரசு தரப்பில் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, “மின்வாரிய ஊழியர் சங்கங்களின் கோரிக்கை தொடர்பாக 9-ம் தேதி(நேற்று) காலை பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது” என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், “மின்வாரிய ஊழியர்கள் ஜன.10-ம்தேதி (இன்று) நடத்துவதாக அறிவித்துள்ள போராட்டத்தால் மக்கள் பாதிப்படையக்கூடும். பேச்சுவார்த்தை நடைபெறும் சூழலில்அதன் முடிவுகளை தெரிந்துகொள்வதற்கு முன்பு வேலைநிறுத்தம் செய்வது சட்டவிரோதமானது” என்று கூறி, போராட்டத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.
மீண்டும் பேச்சுவார்த்தை: தொழிலாளர் நல துணை ஆணையர் ரமேஷ் குமார் தலைமையில் கடந்த 3, 6-ம் தேதிகளில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில்,நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் 5 சதவீத ஊதியஉயர்வு அளிக்க மின்வாரியம் தரப்பில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தொழிற்சங்கங்கள் 20 சதவீத உயர்வு கோரியதால், நேற்றும் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே, மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிகிறது.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiXWh0dHBzOi8vd3d3LmhpbmR1dGFtaWwuaW4vbmV3cy90YW1pbG5hZHUvOTI3MzA3LXByb2hpYml0aW9uLW9mLWVsZWN0cmljYWwtd29ya2Vycy1zdHJpa2UuaHRtbNIBAA?oc=5