காணும் பொங்கல் கூட்டத்தை கட்டுப்படுத்த மெரினா கடற்கரையில் 10 கண்காணிப்பு கோபுரங்கள் – Maalaimalar தமிழ்

சென்னைச் செய்திகள்

சென்னை:

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தை முதல் தேதியில் இருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் உற்சாகமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

தை ஒன்றாம் தேதி பொங்கல் கொண்டாட்டமும் இரண்டாவது நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாட்டமும் களைகட்டும்.

மூன்றாவது நாள் காணும் பொங்கலாக மக்கள் சுற்றுலா தலங்களில் ஒன்று கூடி மகிழ்வார்கள்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்தவித கொண்டாட்டங்களும் பெரிய அளவில் நடைபெறவில்லை. அந்த வகையில் காணும் பொங்கல் கொண்டாட்டத்திற்கும் தமிழகம் முழுவதும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் பொங்கலையொட்டி வரும் காணும் பொங்கல் கொண்டாட்டம் நடைபெறவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு தைப்பொங்கலை வரவேற்க மக்கள் மிகுந்த உற்சாகத்தோடு தயாராகி வருகிறார்கள். வருகிற 15-ந் தேதி தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.

பொங்கலுக்கு இன்னும் நான்கு நாட்களே இருக்கும் நிலையில் மக்கள் பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் கடைவீதிகளில் மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது. பொங்கல் தினத்தன்று வீடுகளில் பொங்கல் வைத்து சூரியனை வழிபடும் மக்கள் மறுநாள் 16-ந் தேதி மாட்டுப் பொங்கலை கொண்டாடி மகிழ்வார்கள். வீடுகளில் உள்ள மாடுகளை குளிப்பாட்டி கொம்புகளில் வர்ணம் தீட்டி மாட்டுப் பொங்கலையும் உற்சாகமாகக் கொண்டாடுவார்கள்.

மூன்றாவது நாளான 17-ந்தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுவதையொட்டி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு காணும் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட மக்கள் இப்போதே ஆவலுடன் உள்ளனர்.

சென்னையில் காணும் பொங்கல் கொண்டாட்டம் மெரினா கடற்கரையில் மிகுந்த உற்சாகத்தோடு இந்த ஆண்டு கொண்டாடப்பட உள்ளது.

இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் தென்சென்னை கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மெரினா கடற்கரைக்குட்பட்ட அண்ணா சதுக்கம் மற்றும் மெரினா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள உரிய அறிவுரைகளை உயரதிகாரிகள் வழங்கி உள்ளனர்.

மெரினா கடற்கரை மட்டுமன்றி சென்னையில் உள்ள சிறிய மாநகராட்சி பூங்காக்கள் முதல் பெரிய பூங்காக்கள் வரை அத்தனை பூங்காக்களிலும் மக்கள் கூட்டம் காணும் பொங்கல் அன்று அலைமோதும்.

கிண்டி சிறுவர் பூங்காவிலும் பொதுமக்களின் கூட்டம் அதிக அளவில் காணப்படும். இதனை கருத்தில் கொண்டு சென்னை மாநகரம் முழுவதும் 16 ஆயிரம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்தந்த பகுதிகளை சேர்ந்த துணை கமிஷனர்கள் உதவி கமிஷனர்கள் ஆகியோருக்கு உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மெரினா கடற்கரையில் காணும் பொங்கல் நாளில் சுமார் ஒரு லட்சம் பேர் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அன்றைய தினம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மெரினா கடற்கரைக்கு சென்று பொழுதை போக்குவார்கள்.

காணும் பொங்கல் அன்று மாலை 6 மணியில் இருந்தே மக்கள் மெரினாவில் கூடத் தொடங்கி விடுவார்கள். இரவு 9 மணி அளவில் கட்டுக்கடங்காத வகையில் கூட்டம் காணப்படும். இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட் கொள்ளையர்கள் யாரும் கைவரிசை காட்டி விடக்கூடாது என்பதற்காக மாறுவேடத்திலும் போலீசார் கண்காணிக்க உள்ளனர். பைனாகுலர் மூலமாக கூட்டத்தை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக கடற்கரை மணல் பகுதிகளில் சுமார் 10 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன. அதில் இருந்தபடியே போலீசார் கூட்டத்தை கண்காணிக்க உள்ளனர். குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் மெரினா கடற்கரையில் சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறை ஒன்றும் தற்காலிகமாக திறக்கப்பட உள்ளது.

அதில் இருந்தபடியே காவல் துறையினர் ஒலி பெருக்கி மூலமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான தகவல்களை தெரிவிக்க உள்ளனர்.

பொங்கல் பண்டிகை நாளில் இருந்தே மெரினா கடற்கரையில் மக்கள் பொழுதைப் போக்க திரளாக கூடுவார்கள் என்பதால் 15, 16, 17 ஆகிய மூன்று நாட்களும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை அடுத்து வருகிற 14-ந் தேதி சனிக்கிழமை மாலையில் இருந்தே மெரினாவில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட உள்ளது. இதேபோன்று பொங்கலை ஒட்டி மக்கள் கூடும் பகுதிகளில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் உயர் போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiWmh0dHBzOi8vd3d3Lm1hYWxhaW1hbGFyLmNvbS9uZXdzL3N0YXRlL2thYW51bS1wb25nYWwtMTAtd2F0Y2h0b3dlcnMtaW4tbWFyaW5hLWJlYWNoLTU1OTI4M9IBXmh0dHBzOi8vd3d3Lm1hYWxhaW1hbGFyLmNvbS9hbXAvbmV3cy9zdGF0ZS9rYWFudW0tcG9uZ2FsLTEwLXdhdGNodG93ZXJzLWluLW1hcmluYS1iZWFjaC01NTkyODM?oc=5