கடத்தல் களமாக மாறியுள்ள சென்னை விமான நிலையம்: அதிர்ச்சி தரும் புள்ளி விவரங்கள்: கடத்தல் தொழிலில் பெண்கள் அதிகரிப்பு – தினகரன்

சென்னைச் செய்திகள்

மீனம்பாக்கம் :  சென்னை விமான நிலையத்தில் கடந்த 2021ம் ஆண்டைவிட 2022ம் ஆண்டில் தங்கம், போதைப்பொருள், வெளிநாட்டு கரன்சி போன்ற கடத்தல் பொருட்கள் அதிக அளவில் பிடிபட்டுள்ளது. சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் கடந்த 2022 ஜனவரி முதல் தேதியில் இருந்து டிசம்பர் 31ம் தேதி வரையில் நடத்திய சோதனையில் ரூ.94.22 கோடி மதிப்பிலான 205.84 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கம் கடத்தல் தொடர்பாக 293 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கடத்தலில் ஈடுபட்ட 97 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கடத்தல் தங்கம் அதிகமாக துபாய், சார்ஜா, குவைத், சவுதிஅரேபியா, இலங்கை உள்பட வளைகுடா நாடுகளில் இருந்து கடத்தப்பட்டுள்ளன. கடந்த 2022ம் ஆண்டில், பெண்கள் தலைமுடி கூந்தலுக்குள் தங்கத்தை மறைத்துக் கொண்டு வருவது, தங்க ஸ்பேனர்கள் டூல்ஸ் பாக்கெட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு வருவது, தங்கத்தை பவுடராக்கி குங்கும பொடிகளுக்குள் மறைத்து கொண்டுவருவது போன்ற கடத்தல் சம்பவங்கள் அதிக அளவில் நடந்தன. இதேபோல், சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற ரூ.10.97 கோடி மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக 81 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வெளிநாட்டு கரன்சி கடத்தல் சம்பவங்களில், பெண்கள் அதிக அளவில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.14 கோடி மதிப்பிலான 27.66 கிலோ ஹெராயின், மெத்தகுலோன், கோகைன் ஆகிய போதைப் பொருட்களை சுங்கத்துறையினர் கடந்த ஆண்டு விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனர். கடந்த 2022ம் ஆண்டில் சென்னை விமான நிலையத்தில் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 12 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த போதைப்பொருட்கள் உகாண்டா, தான்சானியா, வெனிசுலா, எத்தியோப்பியா மற்றும் கென்யாவைச் சேர்ந்தவர்கள், சார்ஜா மற்றும் எத்தியோப்பியாவின் தலைநகரான, அடிஸ் அபாபா நாடுகளிலிருந்து  கடத்தி வந்துள்ளனர். இந்த போதைப் பொருள் கடத்தலில் வெளிநாட்டு பெண்கள் அதிக அளவில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ரூ. 1.26 கோடி மதிப்பிலான 5,274 காரட் வைர கற்கள் மற்றும் நவரத்தினங்கள் கடத்தப்பட்டுள்ளன.

சென்னையில் இருந்து வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற ஒரு புத்தர் சிலை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ரூ.3.90 கோடி மதிப்புள்ள சிகரெட்டுகள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 2022ல் மட்டும், 124.88 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், போதைப்பொருட்கள் கடத்தப்பட்டுள்ளன. 407 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 122 கடத்தல் ஆசாமிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் கணிசமான பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாடுகளில் இருந்து மின்னணு சாதன பொருட்கள் சென்னைக்கு கடத்தி வருவது பெரிய அளவில் குறைந்துவிட்டது. அதேபோல் சென்னையில் இருந்து வெளிநாட்டிற்கு அடிக்கடி கடத்தப்படும் நட்சத்திர ஆமைகள், கடல் குதிரைகள், மயில் இறகுகள் போன்றவை கடத்தலும் பெருமளவு குறைந்து விட்டன.  

கடந்த 2021ம் ஆண்டில் சென்னை விமான நிலையத்தில் ரூ.70.12 கோடி மதிப்புடைய 157 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. ஆனால் 2022ம் ஆண்டில் அது ரூ.94.22 கோடி 205 கிலோவாக அதிகரித்துள்ளது. இதேபோல், சென்னை விமான நிலையத்தில் இருந்து போதைப் பொருள் கடத்தல் 2021ம் ஆண்டில் ரூ.11 கோடி மதிப்பில் ஹெராயின் மெத்தோ குயிலோன் பிரவுன் சுகர் போன்ற போதை பொருட்கள் பிடிபட்டன. இது, 2022ம் ஆண்டில் ரூ.14 கோடியாக அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு பிடிபட்ட கரன்சி, கடந்த 2021ம் ஆண்டில் ரூபாய் ஒன்பது கோடியாக இருந்தது. ஆனால் 2022ம் ஆண்டில் ரூ. 10.98 கோடியாக அதிகரித்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை மட்டுமின்றி மத்திய வருவாய் புலனாய்வு துறை, மத்திய போதை தடுப்பு பிரிவுத்துறை உள்ளிட்ட மேலும் சில அமைப்புகளும் திடீர் சோதனைகள் நடத்தி, கடத்தல் தங்கம், போதைப் பொருட்கள், கரன்சிகளை பெரிய அளவில் பறிமுதல் செய்வது வழக்கம். ஆனால் தற்போது சுங்கத்துறை மட்டுமே தாங்கள் கடந்த 2022ம் ஆண்டில் பிடித்த கடத்தல் பொருட்கள் பற்றிய விவரங்களை தெரிவித்துள்ளனர். மத்திய வருவாய் புலனாய்வுத் துறை, மத்திய போதை தடுப்பு பிரிவு உள்ளிட்ட அமைப்புகள் இதுவரை தாங்கள் பிடித்த கடத்தல் பொருட்களின் விவரங்களை தெரிவிக்கவில்லை.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MzAxOTfSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgzMDE5Ny9hbXA?oc=5