சென்னை:
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
பொங்கலை சொந்த ஊரில் கொண்டாடவே மக்கள் விரும்புவதால் வேலை மற்றும் தொழில் ரீதியாக சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள் 2 நாட்களுக்கு முன்பே பயணத்தை தொடங்கி விட்டனர்.
சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்ல வசதியாக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு பஸ்களுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்து பயணிக்கின்ற வசதி உள்ளது.
இதுவரையில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு 2 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு பொங்கல் சிறப்பு பஸ்கள் 12-ந்தேதி முதல் இயக்கப்படுகின்றன. 2 நாட்களில் அரசு பஸ்களில் மட்டும் 4 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. 12 மற்றும் 13 ஆகிய நாட்களிலும் மொத்தம் 6796 பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினத்தைவிட நேற்று மக்கள் கூட்டம் பல மடங்கு அதிகரித்தது.
கோயம்பேடு, கே.கே.நகர், தாம்பரம், மாதவரம், பூந்தமல்லி, உள்ளிட்ட 6 பஸ் நிலையங்களிலும் நள்ளிரவு வரை கூட்டம் அலைமோதியது.
குறிப்பாக கோயம்பேடு பஸ் நிலையம் மாலை 4 மணியில் இருந்து பயணிகள் கூட்டத்தால் திணறியது. இரவு நேரத்தில் பிளாட்பாரத்தில் நடக்க முடியாத அளவிற்கு கூட்டம் நிரம்பி வழிந்தது.
குடும்பம் குடும்பமாக மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து சென்றனர். பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், நிறுவனங்களுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டதால் மக்கள் சாரை சாரையாக வந்து கொண்டே இருந்தனர்.
முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமின்றி முன்பதிவு செய்யாமல் கடைசி நேரத்தில் பயணம் செய்ய வருபவர்களுக்காக சிறப்பு பஸ்கள் இயக்க தயாராக இருந்தன.
போக்குவரத்து கழக அதிகாரிகள், ஊழியர்கள் பொது மக்களுக்கு ஒலிப்பெருக்கி மூலம் தகவல்களை தெரிவித்து கொண்டே இருந்தனர்.
மக்கள் கூட்டம் நள்ளிரவை கடந்து அதிகாலை 3.30 மணி வரை வந்து கொண்டே இருந்ததால் அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சிறப்பு பஸ் இயக்கத்தை நேரில் ஆய்வு செய்தார். கோயம்பேடு உள்ளிட்ட சிறப்பு பஸ் நிலையங்களுக்கு சென்று தேவையான அளவு பஸ் வசதியை ஏற்படுத்தி கொடுத்தார். இடமில்லை, பஸ் இல்லை என்ற பேச்சுக்கு வாய்ப்பு கொடுக்காத வகையில் பொதுமக்களுக்கு பஸ் வசதி செய்து கொடுக்கப்பட்டதை நள்ளிரவு வரை பார்வையிட்டார்.
ஆம்னி பஸ் பேருந்து நிலையத்திலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களிலும் சொந்த ஊர் செல்ல மக்கள் நிரம்பி இருந்தனர். முன்பதிவு அல்லாத பெட்டிகளில் நிற்பதற்கு கூட இடம் இல்லாமல் நெரிசலில் பயணம் செய்தனர்.
வெளியூர் செல்லும் பொது மக்கள் வசதிக்காக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதலாக இரவு நேர பஸ்கள் இயக்கப்பட்டன. இதுதவிர மெட்ரோ ரெயில் சேவையும் நீட்டிக்கப்பட்டது.
நெரிசல் மிகுந்த நேரங்களில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்பட்டு வந்த மெட்ரோ ரெயில் சேவை இரவு 10 மணி வரை நேற்று நீட்டிக்கப்பட்டது.
5 நிமிடத்திற்கு ஒரு சேவை என்ற அளவில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டன. மெட்ரோ ரெயில் சேவை இன்று நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்படுகிறது.
அனைத்து மெட்ரோ ரெயில் முனையங்களில் இருந்து செல்லும் கடைசி மெட்ரோ ரெயில் இரவு 11 மணிக்கு பதிலாக 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMid2h0dHBzOi8vd3d3Lm1hYWxhaW1hbGFyLmNvbS9uZXdzL3N0YXRlL3RhbWlsLW5ld3MtcG9uZ2FsLWZlc3RpdmFsLTQtbGFraC1wZW9wbGUtdHJhdmVsLW5hdGl2ZS1wbGFjZS1mcm9tLWNoZW5uYWktNTYwNTcy0gF7aHR0cHM6Ly93d3cubWFhbGFpbWFsYXIuY29tL2FtcC9uZXdzL3N0YXRlL3RhbWlsLW5ld3MtcG9uZ2FsLWZlc3RpdmFsLTQtbGFraC1wZW9wbGUtdHJhdmVsLW5hdGl2ZS1wbGFjZS1mcm9tLWNoZW5uYWktNTYwNTcy?oc=5