இதையடுத்து ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பிரதிக் மீது புகாரளித்தார். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கும்படி கமிஷனர் சங்கர் ஜிவால், சென்னை மத்திய குற்றப்பிரிவின் நம்பிக்கை ஆவண மோசடிப் பிரிவுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவின் நம்பிக்கை ஆவண மோசடிப் பிரிவு -1-ல் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. உதவி கமிஷனர் ஜான் விகடர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மேனகா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் புகாரளித்த ராஜேந்திரனிடமும் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் பிரதிக்கை போலீஸார் தேடிவந்தனர். அவரைப் பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், தனிப்படை போலீஸாரிடம் ஜன. 13-ம் தேதி பிரதிக் சிக்கினார். அவரிடம் விசாரித்தபோது ராஜேந்திரனைப்போல இன்னும் சிலரிடமும் பிரபலமான நிறுவனங்களின் பெயரைச் சொல்லி உரிமம் வாங்கித் தருவதாகக் கூறி பிரதிக் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, பிரதிக்கை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். பிரதிக்கின் பின்னணி குறித்து போலீஸார் விசாரித்துவருகிறார்கள்.
இது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் கேட்டதற்கு, “ புகாரளித்த ராஜேந்திரன் அனுப்பிய வங்கிக் கணக்குகளை ஆய்வுசெய்தோம். அப்போதுதான் பிரதிக், மும்பையில் வசிப்பது தெரியவந்தது. அதனால் பிரதிக்கைப் பிடிக்க நடவடிக்கை எடுத்தோம். ஆனால், அவர் தலைமறைவாக இருந்துவந்தார். இந்தச் சூழலில்தான் பிரதிக் பதுங்கியிருக்கும் இடம் குறித்து ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அவரைக் கைதுசெய்து பணத்தை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். பிரதிக் மீது ஏற்கெனவே மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இவர், பிரபலமான ஆடை ஷோரும்களின் இணையதளங்களின் விவரங்களைச் சேகரித்து அதிலிருப்பவர்களின் பெயர்களில் முதலில் போலியான ஆவணங்களைத் தயாரிப்பார். பின்னர் அதன்மூலம்தான் மோசடியில் ஈடுபட்டுவந்திருக்கிறார். மேலும், இவர், தன்னிடம் பிசினஸ் தொடர்பாக அறிமுகமாகுபவர்களிடம் பிரபலமான நிறுவனங்களின் Franchse லைசென்ஸ் பெற்றுத் தருவதாகக்கூறி நம்பவைத்து லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டுவந்திருக்கிறார் ” என்றனர்.
இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ராஜேந்திரனும் பிரதிக்கின் அப்பா ராதாகிருஷ்ணனும் ஒரே இடத்தில் குடியிருந்திருக்கிறார்கள். பிரதிக்கின் அப்பாவும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இந்தச் சூழலில்தான் பிரதிக், இன்ஜினீயரிங் படித்து விட்டு வங்கி ஒன்றில் வேலைப்பார்த்து வந்திருக்கிறார். பின்னர் வேலை நிமித்தமாக மும்பைக்குச் சென்றிருக்கிறார். அப்போதுதான் ராஜேந்திரனிடம் கோடி கணக்கில் பணம் இருப்பதைத் தெரிந்துக் கொண்ட பிரதிக், அவருக்கு பிசினஸ் ஆசை காட்டி மோசடியில் ஈடுபட்டிருக்கிறார். பிரதிக்கின் தொடர்பு துபாய் வரை உள்ளதால் அதுதொடர்பாக விசாரித்து வருகிறோம்” என்றார்.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiUGh0dHBzOi8vd3d3LnZpa2F0YW4uY29tL25ld3MvY3JpbWUvbW9uZXktY2hlYXRpbmctY2FzZS15b3V0aC1hcnJlc3RlZC1pbi1jaGVubmFp0gFaaHR0cHM6Ly93d3cudmlrYXRhbi5jb20vYW1wL3N0b3J5L25ld3MvY3JpbWUvbW9uZXktY2hlYXRpbmctY2FzZS15b3V0aC1hcnJlc3RlZC1pbi1jaGVubmFp?oc=5