சென்னை: கியூபா புரட்சியாளர் சேகுவேராவின் மகள் அலெய்டா குவேராவுக்கு சென்னை விமான நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு உள்ளிட்ட இடதுசாரி அமைப்புகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கியூப சோஷலிச புரட்சியாளர், சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா. கியூபாவின் ஹவானா நகரில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். இவரது மகள் எஸ்டெஃபானி குவேரா, பொருளாதாரத் துறை பேராசிரியராக பணியாற்றுகிறார்.
இந்நிலையில், அலெய்டா குவேரோ தனது மகள் எஸ்டெஃபானியுடன் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் சென்ற அவர்கள், திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலமாக நேற்று சென்னை வந்தனர்.. விமான நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட இடதுசாரி அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர் கட்சிக் கொடிகள், பதாகைகளுடன் திரண்டு அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், செயற்குழு உறுப்பினர் சாமுவேல்ராஜ், மாநிலக் குழு உறுப்பினர்கள் எம்.ராமகிருஷ்ணன், ஏ.ஆறுமுகநயினார், பா.ஜான்சிராணி உள்ளிட்டோர் வரவேற்றனர். மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யாவும் இதில் பங்கேற்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறும்போது, “அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தில் தமிழகமும் தன்னை இணைத்துக் கொள்கிறது என்ற அடிப்படையில் இந்த வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது” என்றார். பின்னர், தி.நகர் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகம் சென்ற அலெய்டா, அங்கு கட்சியினருடன் கலந்துரையாடினார்.
இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் அலெய்டா, எஸ்டெஃபானி இருவரும் இன்று கலந்துரையாடுகின்றனர்.
இதைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் இன்று மாலை நடத்தப்படும் வரவேற்பு நிகழ்ச்சியில் முத்தரசன் மற்றும் எம்.பி.க்கள் கனிமொழி, திருமாவளவன், சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் அலெய்டா பேசியதாவது: பல இடர்பாடுகள் உருவாக்கி க்யூபாவை முடக்க அமெரிக்கா முயன்றாலும் அதனால் எங்களின் மகிழ்ச்சியையும், மனிதம் நிறைந்த பங்களிப்பையும் குலைக்க முடியவில்லை. கரோனா பெருந்தொற்று காலத்தை எதிர்கொள்ள உலக சுகாதார நிறுவனம் க்யூபாவிடம் வந்தது. இவ்வளவு நெருக்கடிக்கு இடையிலும் 5 தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ளோம். அதற்கு காரணம், பலரின் உயிர் தியாகத்துடன், சோசலிஸத்தின் மீதான பற்றுறுதியுடன் க்யூபா செயலாற்றுவதுதான் என்றார்.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiSWh0dHBzOi8vd3d3LmhpbmR1dGFtaWwuaW4vbmV3cy90YW1pbG5hZHUvOTMwNDI4LWNoZS1ndWV2YXJhLWRhdWdodGVyLmh0bWzSAQA?oc=5