சென்னை: குழந்தைகள் விளையாட பொம்மைகள் வாங்கித் தருவோர், அது இந்திய தர நிர்ணயம் பெற்ற பொம்மைகள்தானா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
ஒருவேளை, தர நிர்ணய சான்று பெறாத பொம்மைகளை வாங்கிக் கொடுப்பதால், அது பிள்ளைகளுக்கு நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் விஷமாக மாறி குழந்தைகளை பாதிக்கலாம் என்றும் இந்திய தர நிர்ணய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் கடந்த செவ்வாயன்று, இந்திய தர நிா்ணய அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத 1,466 பொம்மைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து சந்தைப் பிரிவு மற்றும் நுகா்வோா் நல விவகார துணை இயக்குநா் அஜய் கண்ணா புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
ராயப்பேட்டையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் உள்ள ரிலையன்ஸ் பிரான்ட் நிறுவனத்தின் ஹோம்லேஸ் கடையில் இந்திய தர நிா்ணய அதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
இதில், இந்திய தர நிா்ணய முத்திரையில்லாமல் விற்பனை செய்யப்பட்ட 496 மின்னணு பொம்மைகள் 970 சாதாரண பொம்மைகள் என மொத்தம் 1,466 பொம்மைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், ஐஎஸ்ஐ முத்திரை தவறாக பயன்படுத்துவது குறித்த புகாா்களுக்கு பிஐஎஸ் தெற்கு மண்டல அலுவலகம், சிஐடி வளாகம், 4-ஆவது குறுக்கு சாலை, தரமணி, சென்னை-600 113 என்ற முகவரியிலும், ‘பிஐஎஸ் கோ்’ என்ற செயலி அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கலாம்.
மேலும், சோதனை மற்றும் பறிமுதல் குறித்த கூடுதல் தகவல்களுக்கு 94432 43712 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பொம்மை தயாரிக்கும் நிறுவனங்கள், உரிய உரிமம் பெற்று தயாரிக்குமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐஎஸ்ஐ தரச் சான்று பெற்ற பொம்மைகள் மற்றும் சான்று பெறாத பொம்மைகளக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. ஒரு பொம்மை ஐஎஸ்ஐ தரச் சான்று பெற ஏழு சோதனைகள் நடத்தப்படுகின்றன. அதில் தேர்ச்சி பெற்றால்தான் அவை விற்பனைக்காக சந்தைக்கு வரும். பொம்மைகளில் கூர்மையான பாகங்கள் இருக்கிறதா, அவை குழந்தைகளுக்கு உடலில் காயத்தை ஏற்படுத்துமா? பொம்மை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட பொருள்களில் குழந்தைகளின் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ரசாயனங்கள் உள்ளனவா? அந்த பொம்மைகளை குழந்தைகள் கடிக்கும் போது குழந்தைகளுக்கு அந்த ரசாயனங்களால் ஆபத்து நேரிடுமா? மின்னணு விளையாட்டு பொம்மைகள் மூலம் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது தொடர்பான பல ஆய்வுகள் நடத்தப்பட்ட பிறகே சான்றளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMijAFodHRwczovL3d3dy5kaW5hbWFuaS5jb20vYWxsLWVkaXRpb25zL2VkaXRpb24tY2hlbm5haS9jaGVubmFpLzIwMjMvamFuLzE5L2J1eWluZy10b3lzLWZvci1jaGlsZHJlbi1pcy1ub3QtYS1nYW1lLW9mZmljaWFscy13YXJuLTM5ODY0MTkuaHRtbNIBiQFodHRwczovL20uZGluYW1hbmkuY29tL2FsbC1lZGl0aW9ucy9lZGl0aW9uLWNoZW5uYWkvY2hlbm5haS8yMDIzL2phbi8xOS9idXlpbmctdG95cy1mb3ItY2hpbGRyZW4taXMtbm90LWEtZ2FtZS1vZmZpY2lhbHMtd2Fybi0zOTg2NDE5LmFtcA?oc=5