சென்னை-கன்னியாகுமரி கப்பல் போக்குவரத்துகடல்வழி பயணம் காலத்தின் கட்டாயம் பொதுமக்கள் கருத்து – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

கப்பல்கள், படகுகள் மூலமாக ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கடல் வழியாக செல்லும் போக்குவரத்து உள்நாட்டு அளவில் அதிக பயன்பாடுகள் இல்லாமல் இருந்தாலும், சர்வதேச அளவில் மிக முக்கியப் போக்குவரத்தாக இருக்கிறது.

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் சென்னை துறைமுகம், எண்ணூர் காமராஜர் துறைமுகம், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் போன்றவை முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும்.

சென்னை துறைமுகம் வழியாக கார், தோல் பொருட்கள், ஆயத்த ஆடைகள், ரசாயனங்கள், ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் மற்றும் பொறியியல் எந்திரங்களின் உதிரி பாகங்கள் ஆகியவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

அதேபோல், உணவுப் பொருட்கள், உரங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவை முக்கிய இறக்குமதி செய்யப்படுகின்றன.

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் மூலம் நிலக்கரி, பெட்ரோலியப் பொருட்கள், வேதியியல் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. வ.உ.சி. துறைமுகம் மூலம் உணவு, மாட்டுத் தீவனம், கனிமங்கள், சமையல் எண்ணெய், சிமெண்டு போன்றவை கையாளப்படுகின்றன.

பயணிகள் கப்பல்

துறைமுகங்கள் மூலம் சரக்கு போக்குவரத்து நடந்து வந்தாலும், பயணிகள் போக்குவரத்து இதுவரை தமிழ்நாட்டில் சாத்தியப்படாமலே இருந்து வருகிறது.

எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்த போது, சென்னை, புதுச்சேரி, காரைக்கால் வழியாக கன்னியாகுமரிக்கு மிதவைப் படகு (ஹோவர்கிராப்ட்) போக்குவரத்தை தொடங்கத்திட்டம் தீட்டினார். இதுதொடர்பாக ஜப்பானில் உள்ள நிறுவனத்திடமும் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. அதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் அந்த திட்டம் ஏனோ செயல் வடிவம் பெறவில்லை.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் நலன் கருதி தற்போது பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வரும் நிலையில், சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து திட்டத்தையும் நிறைவேற்றித் தரவேண்டும் என்பது தமிழ்நாட்டு மக்களின் குரலாக இருக்கிறது.

பொருளாதார வளர்ச்சி

இதுகுறித்து தியாகராயநகரைச் சேர்ந்த பட்டுதேவி:-

உத்தரபிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், அசாம் மற்றும் மேற்கு வங்காளம் என 5 மாநிலங்களும், அண்டை நாடான வங்காள தேசத்தையும் உள்ளடக்கிய, உலகிலேயே மிக நீண்டதூர நதிவழி போக்குவரத்தை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்துள்ளார். தமிழ்நாட்டில் நதிவழி போக்குவரத்துக்கு வாய்ப்பு இல்லை என்றாலும் தமிழ்நாட்டில் 912 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடற்கரை பகுதி உள்ளது. இந்த பொங்கலின் போது ஊருக்குச் செல்ல ரெயிலிலும், விமானத்திலும் டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை. சரி காரில் செல்லலாம் என்றால் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஊருக்குப் போக முடியவில்லை. எல்லாவழிப் போக்குவரத்து வாய்ப்புகளும் ஏறத்தாழ நிறைவு அடைந்து வருகிறது. இனி கடல் போக்குவரத்தை தொடங்கினால்தான் மக்களுக்கு பயணம் எளிமைப்படும். சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை பல துறைமுகங்கள் உள்ளன. இவ்வளவு உள்கட்டமைப்பை வைத்திருக்கும் நாம் கடல்வழி கப்பல் போக்குவரத்தை தொடங்க வேண்டும். அதற்காக அரசு உடனடியாக முயற்சிக்க வேண்டும். பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கிவிட்டால் பொருளாதார ரீதியாக தமிழ்நாடு வளர்ச்சி பெறும்.

மன அழுத்தம் குறையும்

கொளத்தூரை சேர்ந்த இதய நோய்க்கு சிகிச்சை அளிக்கும் பயிற்சி மருத்துவர் மோனிகா பிரபாகரன்:-

கடல்வழி போக்குவரத்து என்பது ஒரு சுவாரஸ்யமான விஷயம். குறிப்பாக டென்சனான மனநிலையில் வாழும் மனிதர்களுக்கு சாலை, ரெயில் மற்றும் விமான போக்குவரத்தைவிட கடல் வழி போக்குவரத்து மன நிம்மதியை அளிக்கும். எனவே சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை கடல் வழி பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதால் சாலை விபத்துகள் குறைவதுடன், குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான மற்றும் நிறைவான பயணத்தையும் மேற்கொள்ள முடியும். பொதுமக்கள் விரும்பும் வகையில் கொண்டு வரப்படும் புதிய முயற்சியை வரவேற்கிறோம்.

சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்

சென்னை பண்பு மற்றும் கலாசார பயிற்சி முனைய அறக்கட்டளை தலைவர் ராஜலெட்சுமி:-

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, ஓடிசா, மராட்டியம், குஜராத் போன்ற மாநிலங்கள் கடலோரத்தில் இருப்பதுடன், நதிகளும் இருப்பதால் அங்கு நீர் வழிப்போக்குவரத்து தொடங்குவது எளிது. அவை காலத்தின் கட்டாயமாகவும் இருக்கிறது. நிலப்பரப்பில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை முற்றிலும் தடுப்பதற்காக நீர் வழி போக்குவரத்தை தொடங்குவது சிறந்ததாகும்.

சாலைப்போக்குவரத்துக்கு தேவையான சாலைகள் அமைக்க விவசாய நிலங்கள், நீர் வழித்தடங்கள் சேதப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். இதனால் குடிநீரும் பாதிக்கப்படலாம். எனவே கடல் மார்க்கமாக நீர் வழிப்போக்குவரத்து அமைப்பது நல்லது. நீர் வழிப்போக்குவரத்து மெதுவாக சென்றாலும், குறைந்த பொருள் செலவில் அதிக பொருட்களை கொண்டு செல்ல முடியும்.

வேலைவாய்ப்பை உருவாக்கும்

சகோதரன் அமைப்பின் தொழில்நுட்ப ஆலோசகர் சுதா:-

சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை கடல் வழி பயணிகள் போக்குவரத்து என்பது வரவேற்கத்தக்க விஷயமாகும். கடல் வளத்தை முறையாக பயன்படுத்த முதல்-அமைச்சர் எடுக்கும் நடவடிக்கைகளை முழு மனதுடன் வரவேற்கிறோம். கடல்வழி போக்குவரத்து எளிமையாக இருப்பதுடன், வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்தி தரும். கடல் வழி போக்குவரத்துக்காக வெளிமாநிலங்களில் சென்று பணியாற்ற வேண்டும் என்ற நிலையை தவிர்க்கலாம்.

ஏற்கனவே, தூத்துக்குடியில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புவுக்கும், ராமேசுவரத்தில் இருந்து இலங்கையில் உள்ள தலைமன்னாருக்கும், பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கு இந்தியா-இலங்கை அரசுகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருந்தன. அதனடிப்படையில் தூத்துக்குடி-கொழும்பு இடையே கடந்த 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கியது. ஏனோ காரணத்தால் அந்த போக்குவரத்தும் சிறிது காலத்திலேயே முடிந்து விட்டது. சென்னை-கன்னியாகுமரி இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதுடன் ஏற்கனவே நிறுத்தப்பட்ட சேவையையும் தொடங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வித்தியாசமான அனுபவம்

சேலம் நகர அனைத்து வணிகர் சங்க பொதுச்செயலாளர் ஜெயசீலன்:-

சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து திட்டம் என்பது வரவேற்கக்கூடியது. இதற்காக மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து நீர்வழி போக்குவரத்து கழகத்தை ஏற்படுத்த வேண்டும். இந்த திட்டத்தின் மூலம் இடையில் உள்ள சிறிய துறைமுகங்கள் வளர்ச்சியடைய அங்கு கப்பல் போக்குவரத்து தளங்கள் அமைத்து பயணிகளை ஏற்றி செல்லும் வகையில் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். கப்பல் போக்குவரத்தை தொடங்குவதன் மூலம் சாலையில் வாகன நெரிசல் குறையும். சுற்றுச்சூழலும் மாசு ஏற்படாது. பயணிகளுக்கும் நீர் வழிப்போக்குவரத்து மூலம் வித்தியாசமான ஒரு அனுபவமும் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்கள்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiUmh0dHBzOi8vd3d3LmRhaWx5dGhhbnRoaS5jb20vTmV3cy9TdGF0ZS9zZWEtdHJhdmVsLWlzLXRoZS1tdXN0LW9mLXRoZS10aW1lcy04ODEzMjDSAVZodHRwczovL3d3dy5kYWlseXRoYW50aGkuY29tL2FtcC9OZXdzL1N0YXRlL3NlYS10cmF2ZWwtaXMtdGhlLW11c3Qtb2YtdGhlLXRpbWVzLTg4MTMyMA?oc=5