சென்னை: சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் தயார் செய்வதற்கான முதல் கட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. மக்கள் பிரநிதிகள் தயார் செய்யும் முதல் பட்ஜெட் என்பதால் மக்களை கவரும் வகையில் புதிய அறிவிப்புகள் வெளியிட ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சியில் 2016ம் ஆண்டில் இருந்து ஆறு ஆண்டுகளாக உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாமல் இருந்தது. எனவே, மாநகராட்சி கமிஷனர் முதல் அதிகாரிகள் வரை சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு, பணியாற்றி வந்தனர். கடந்த 2022ல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் சென்னை மாநகராட்சியில், தி.மு.க., பெரும்பான்மை இடங்களை பெற்றது. சென்னை மாநகராட்சியின் மேயராக பட்டியலினத்தை சேர்ந்த பிரியா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் பதவியேற்ற சில நாட்களிலேயே, 2022 – 23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஆனால், அந்த பட்ஜெட் பெரும்பாலும், மாநகராட்சி அதிகாரிகள் தயாரித்தவையாகவே இருந்தது. எனவே, புதிய அறிவிப்புகளும், மக்களை கவரும் திட்டங்களும் பெரிய அளவில் இடம்பெறவில்லை.
இந்நிலையில், 2023 – 24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் பணி மேயர் பிரியா தலைமையில் துவங்கியுள்ளது. நேற்று (ஜன.18) மற்றும் இன்று (ஜன.19 ) ஆகிய இரண்டு நாட்களில், நிலைக்குழு தலைவர்கள் உறுப்பினர்களிடம் பட்ஜெட் தயாரிப்பு குறித்து, தனித்தனி குழுக்களாக ஆலோசித்துள்ளனர். மேலும் வரும் 25ம் தேதி அனைத்து குழுக்களுடான ஆலோசனை கூட்டமும் நடைபெற உள்ளது.
அதேபோல், மண்டலக்குழு தலைவர்களிடம், வார்டு வாரியாக வரவு, செலவு கணக்குகள் தாக்கல் செய்யவும், புதிய திட்டங்கள், தேவைகள் குறித்தும் விரிவான விபரங்கள் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட் பிப்., மாதத்தில் மேயர் பிரியா தலைமையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகளும், திட்டங்களும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து, நிலைக்குழு உறுப்பினர்கள் கூறுகையில், “கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களது ஆலோசனையின்கீழ் தயாரிக்கப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும். எனவே, வரும் 2023 – 2024ம் நிதியாண்டு பட்ஜெட்டில், கல்வி, சுகாதாரம், சாலை, மழைநீர், மேம்பாலம் உள்ளிட்டவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதன்வாயிலாக, மக்களை கவரும் வகையில் புதிய அறிவிப்புகள் வெளியிட ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
மேலும், 2022 – 23ம் நிதியாண்டில், சென்னை மாநகராட்சி சொத்துவரி உயர்த்தப்பட்டது. மேலும், மத்திய அரசின் 15வது நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி, ஒவ்வொரு ஆண்டும் சொத்துவரி உயர்த்த வேண்டும். இதன்படி, 2023 – 24ம் நிதியாண்டிலும் சொத்துவரி குறிப்பிட்ட சதவீதம் உயர்த்த வாய்ப்புள்ளது. அதேநேரம், பொதுமக்களுக்கு ஏற்படும் கூடுதல் சுமையை தவிர்க்கும் வகையில், சொத்துவரி உயர்வில் இருந்து விலக்கு அளிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சொத்துவரி உயர்வில் விலக்கு தொடர்பாக மேயர் பிரியா பட்ஜெட்டில் அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது” என்று அவர்கள் தெரிவித்தனர்.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMigAFodHRwczovL3d3dy5oaW5kdXRhbWlsLmluL25ld3MvdGFtaWxuYWR1LzkzMTA1Ni1maXJzdC1jb25zdWx0YXRpb24tbWVldGluZy10by1wcmVwYXJlLXRoZS1idWRnZXQtb2YtdGhlLWNoZW5uYWktY29ycG9yYXRpb24uaHRtbNIBAA?oc=5