சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விலகினாலும் தொடர்ந்து கடும் பனி, குளிர் நிலவி வருகிறது. ஊட்டி, கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உறை பனி பொழிகிறது.
சென்னையில் டிசம்பர் மாத இறுதியில் இருந்து குளிர் அதிகரித்து வருகிறது. வீட்டின் தரை ஐஸ் போல ஜில்லென மாறிவிட்டது. சூரியன் மறையத்தொடங்கியதும் குளிர் காற்றுடன் பனியும் நிலவி வருகிறது.
ஜனவரி மாதத்தில் இருந்து குளிரும், பனியும் அதிகரிக்கத்தொடங்கியது. சென்னை மற்றும் புறநகர் பகுதி முழுவதும் மின்விசிறி இல்லாமல் குளிர்ந்த காற்றால் இரவில் ரம்மியமான சூழல் நிலவியது.
தமிழகத்தில் வறண்ட வானிலை காணப்பட்டாலும் உள்மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புற நகரில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்று வீசிய நிலையில் லேசான மழை தூறல் இருந்தது. மலை பிரதேசத்தில் இருந்தது போல உணரப்பட்டது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறும்போது, ‘வடக்கில் இருந்து கீழைக்காற்று மற்றும் குளிர்காற்று வீசுவதால் மிதமான வெப்பம் நிலவுகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று லேசான மழை பெயும். வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.
கிழக்கில் இருந்து வரும் காற்றும் மேற்கில் இருந்து வரும் காற்றும் சேர்ந்து வருவதால் குளிர்காற்று நிலவுகிறது. காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்’ என்றனர்.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiT2h0dHBzOi8vd3d3Lm1hYWxhaW1hbGFyLmNvbS9uZXdzL2Rpc3RyaWN0L3RhbWlsLW5ld3MtY2hlbm5haS1zdWRkZW4tcmFpbi01NjI3MjPSAVNodHRwczovL3d3dy5tYWFsYWltYWxhci5jb20vYW1wL25ld3MvZGlzdHJpY3QvdGFtaWwtbmV3cy1jaGVubmFpLXN1ZGRlbi1yYWluLTU2MjcyMw?oc=5