‘சாஸ்த்ரா’ தொழில்நுட்பத் திருவிழா: சென்னை ஐஐடி-இல் இன்று தொடக்கம் – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை ஐஐடி-இல் ‘சாஸ்த்ரா’ தொழில்நுட்பத் திருவிழா போட்டிகள் வியாழக்கிழமை முதல் தொடங்கவுள்ளது.

சென்னை ஐஐடி சாா்பில் அறிவியல் தொழில்நுட்ப நிகழ்ச்சிகள் – போட்டிகள் ‘சாஸ்த்ரா’ என்ற பெயரில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டுக்கான சாஸ்த்ரா திருவிழா வியாழக்கிழமை தொடங்கி, ஜனவரி 29-ஆம் தேதி வரை 4 நாள்கள் நடைபெற உள்ளது. இதில், மொத்தம் 50 நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. சுமாா் 30 ஆயிரம் மாணவா்கள் பங்கேற்கவுள்ளனா்.

இதுகுறித்து ஐஐடி இயக்குநா் வி.காமகோடி செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: ஐஐடி-இன் சாஸ்த்ரா தொழில்நுட்ப திருவிழா கரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக இணையவழியில் நடத்தப்பட்டது. நிகழாண்டு சூழல்கள் சாதமாக இருப்பதால் சாஸ்த்ரா நிகழ்ச்சிகள் நேரடியாக நடைபெற உள்ளது. புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிக்க மாணவா்களுக்கு இந்த தொழில்நுட்ப விழா ஊக்கமளிப்பதாக இருக்கிறது.

இந்த ஆண்டு விழாவில் விண்வெளி ஆராய்ச்சியை மேம்படுத்தும் வகையில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவை விண்வெளி ஆராய்ச்சியில் மாணவா்கள் சிறந்த விளங்க வழிசெய்யும். மேலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பற்ற வகையிலான ஆடை உற்பத்தி முறையிலும் கவனம் செலுத்தப்பட உள்ளது. இவற்றைப் பாா்வையிட பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் அனுமதி வழங்கப்படும் என்றாா் அவா்.

இந்த சந்திப்பின்போது ஐஐடி-இன் முதல்வா் (மாணவா் பிரிவு) நிலேஷ் வாசா, பேராசிரியா் ரத்னகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMizQRodHRwczovL3d3dy5kaW5hbWFuaS5jb20vYWxsLWVkaXRpb25zL2VkaXRpb24tY2hlbm5haS9jaGVubmFpLzIwMjMvamFuLzI2LyVFMCVBRSU5QSVFMCVBRSVCRSVFMCVBRSVCOCVFMCVBRiU4RCVFMCVBRSVBNCVFMCVBRiU4RCVFMCVBRSVCMCVFMCVBRSVCRS0lRTAlQUUlQTQlRTAlQUYlOEElRTAlQUUlQjQlRTAlQUUlQkYlRTAlQUUlQjIlRTAlQUYlOEQlRTAlQUUlQTglRTAlQUYlODElRTAlQUUlOUYlRTAlQUYlOEQlRTAlQUUlQUElRTAlQUUlQTQlRTAlQUYlOEQtJUUwJUFFJUE0JUUwJUFFJUJGJUUwJUFFJUIwJUUwJUFGJTgxJUUwJUFFJUI1JUUwJUFFJUJGJUUwJUFFJUI0JUUwJUFFJUJFLSVFMCVBRSU5QSVFMCVBRiU4NiVFMCVBRSVBOSVFMCVBRiU4RCVFMCVBRSVBOSVFMCVBRiU4OC0lRTAlQUUlOTAlRTAlQUUlOTAlRTAlQUUlOUYlRTAlQUUlQkYtJUUwJUFFJTg3JUUwJUFFJUIyJUUwJUFGJThELSVFMCVBRSU4NyVFMCVBRSVBOSVFMCVBRiU4RCVFMCVBRSVCMSVFMCVBRiU4MS0lRTAlQUUlQTQlRTAlQUYlOEElRTAlQUUlOUYlRTAlQUUlOTUlRTAlQUYlOEQlRTAlQUUlOTUlRTAlQUUlQUUlRTAlQUYlOEQtMzk5MDI0NC5odG1s0gHKBGh0dHBzOi8vbS5kaW5hbWFuaS5jb20vYWxsLWVkaXRpb25zL2VkaXRpb24tY2hlbm5haS9jaGVubmFpLzIwMjMvamFuLzI2LyVFMCVBRSU5QSVFMCVBRSVCRSVFMCVBRSVCOCVFMCVBRiU4RCVFMCVBRSVBNCVFMCVBRiU4RCVFMCVBRSVCMCVFMCVBRSVCRS0lRTAlQUUlQTQlRTAlQUYlOEElRTAlQUUlQjQlRTAlQUUlQkYlRTAlQUUlQjIlRTAlQUYlOEQlRTAlQUUlQTglRTAlQUYlODElRTAlQUUlOUYlRTAlQUYlOEQlRTAlQUUlQUElRTAlQUUlQTQlRTAlQUYlOEQtJUUwJUFFJUE0JUUwJUFFJUJGJUUwJUFFJUIwJUUwJUFGJTgxJUUwJUFFJUI1JUUwJUFFJUJGJUUwJUFFJUI0JUUwJUFFJUJFLSVFMCVBRSU5QSVFMCVBRiU4NiVFMCVBRSVBOSVFMCVBRiU4RCVFMCVBRSVBOSVFMCVBRiU4OC0lRTAlQUUlOTAlRTAlQUUlOTAlRTAlQUUlOUYlRTAlQUUlQkYtJUUwJUFFJTg3JUUwJUFFJUIyJUUwJUFGJThELSVFMCVBRSU4NyVFMCVBRSVBOSVFMCVBRiU4RCVFMCVBRSVCMSVFMCVBRiU4MS0lRTAlQUUlQTQlRTAlQUYlOEElRTAlQUUlOUYlRTAlQUUlOTUlRTAlQUYlOEQlRTAlQUUlOTUlRTAlQUUlQUUlRTAlQUYlOEQtMzk5MDI0NC5hbXA?oc=5