சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு, நாளை சென்னை உழைப்பாளர் சிலை அருகே ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசியக் கொடியைஏற்றி வைத்து, முப்படையினர், காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் மற்றும் விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார். விழாவை முன்னிட்டு சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாட்டின் 74-வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுகிறது. சென்னை மெரினா காமராஜர் சாலையில் சேப்பாக்கம் பகுதியில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே நடைபெறும் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து, முப்படையினர், காவல்துறையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். சென்னையில் வழக்கமாக, மெரினா காந்தி சிலை பகுதியில் குடியரசு தின விழா நடைபெறும். அப்பகுதியில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் நடப்பதால், இந்த முறை உழைப்பாளர் சிலை பகுதியில் விழா நடத்தப்படுகிறது. குடியரசு தின அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை 3-வது முறையாக நேற்று நடத்தப்பட்டது.
குடியரசு தினத்தையொட்டி, நாளை காலை 8 மணி அளவில் முதல்வர் ஸ்டாலினும், அவரைத் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவியும் காவல் துறை மற்றும் ராணுவ அணிவகுப்புடன் விழா நடைபெறும் இடத்துக்கு வருவார்கள். அவர்களுக்கு முப்படை தலைமை அதிகாரிகள், டிஜிபி, சென்னை காவல் ஆணையர் ஆகியோரை தலைமைச் செயலர் அறிமுகம் செய்து வைப்பார். இதையடுத்து, தேசியக் கொடியை ஆளுநர் ஏற்றிவைப்பார்.
இதன் பிறகு, முப்படையினர், கடலோர காவல் படையினர், காவல், சிறை, வனம், தீயணைப்பு துறையினர், ஊர்க்காவல் படையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பும், இடையில் கடலோர காவல் படை,கடற்படை, விமானப்படையின் அலங்காரஊர்திகளும் வலம் வரும்.
தொடர்ந்து, வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம், மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது. காந்தியடிகள் காவலர் பதக்கம் உள்ளிட்டவற்றை முதல்வர் ஸ்டாலின் வழங்குவார். தொடர்ந்து, அலங்கார வாகன அணிவகுப்புகள் நடைபெறும்,
கடந்த ஆண்டு கரோனா கட்டுப்பாடு காரணமாக குறைந்த அளவு வாகனங்களே பங்கேற்றன. இந்த முறை, தமிழக அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த 21 அலங்கார வாகனங்கள் அணிவகுக்கின்றன. கலை நிகழ்ச்சிகளில் ராஜஸ்தானின் குல்பாலியா நடனம், மகாராஷ்டிராவின் கோலி நடனம், அசாமின் பாகுரும்பா நடனம், தமிழகத்தின் கரகாட்டம், கைசிலம்பாட்டம் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.
கிண்டி ஆளுநர் மாளிகையில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் தேநீர் விருந்துக்கு முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார்.
குடியரசு தின விழாவையொட்டி, காமராஜர் சாலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரடி மேற்பார்வையில் சென்னையில் 6,800 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாகன சோதனை தீவிரம்: சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட சென்னை விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்துமுனையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள்மற்றும் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் கூடுதலாக போலீஸார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விடுதிகள், ஓட்டல்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு, சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து தகவல் தெரிந்தால் காவல் துறைக்கு தெரிவிக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நகரின் முக்கிய நுழைவு பகுதிகளான மாதவரம், திருவொற்றியூர், மதுரவாயல், மீனம்பாக்கம், துரைப்பாக்கம், நீலாங்கரை உள்ளிட்ட இடங்களில் சோதனை சாவடி அமைத்து போலீஸார் வாகனத் தணிக்கை நடத்துகின்றனர்.
குடியரசு தினத்தை முன்னிட்டு இன்றும், நாளையும் (ஜன.25, 26) சென்னையில் ட்ரோன் உள்ளிட்ட ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி இவற்றை பறக்கவிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.
டிஜிபி சைலேந்திர பாபுவின் வழிகாட்டுதல்படி தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காவல் ஆணையர்கள், எஸ்.பி.க்கள் கண்காணிப்பு பணிகளில் நேரடியாக ஈடுபட்டுள்ளனர். கடல் வழியாக சமூகவிரோதிகள் ஊடுருவாமல் தடுக்க, தமிழக கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் டிஜிபி சந்தீப் மித்தல் தலைமையில் தனிப்படை போலீஸார் படகுகளில் ரோந்து சுற்றி வருகின்றனர்.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMikgFodHRwczovL3d3dy5oaW5kdXRhbWlsLmluL25ld3MvdGFtaWxuYWR1LzkzMzk2Ni1iYW4tb24tZmx5aW5nLWRyb25lcy1vbi10aGUtb2NjYXNpb24tb2YtcmVwdWJsaWMtZGF5LXRvbW9ycm93LTUtbGF5ZXJzLW9mLXNlY3VyaXR5LWluLWNoZW5uYWkuaHRtbNIBAA?oc=5