அசாமில் இருந்து சென்னை வந்தபோது நடுவானில் விமான பயணி உயிரிழப்பு – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை,

அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து 134 பயணிகளுடன் விமானம் ஒன்று நேற்று முன்தினம் இரவு சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையம் வந்து இறங்க தயாராக இருந்தது. இந்த விமானத்தில் சென்னையில் கல்லீரல் சிகிச்சை பெறுவதற்காக அசாம் மாநிலத்தை சேர்ந்த சஜித் அலி (46) என்பவர் பயணம் செய்தார். இந்த நிலையில், விமானம் நடுவானில் வந்தபோது, சஜித்அலிக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது.

இது குறித்து அவருடன் வந்த சகோதர் விமான பணிப்பெண்களிடம் தகவல் தந்தார். இதையடுத்து, பணிப்பெண்கள் வந்து சஜித் அலிக்கு முதலுதவி அளித்தனர். இது பற்றி விமானிக்கு தகவல் தரப்பட்டது. விமானி சென்னை விமான நிலைய கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து, மருத்துவ குழுவை தயாராக வைத்து இருக்க வேண்டும் என கோரினார்.

இதைத்தொடர்ந்து 9.40-க்கு விமானம் தரையிறங்கியதும் விமான நிலைய மருத்துவ குழு விரைந்து சென்று பரிசோதனை செய்தனர். அப்போது நடுவானிலேயே சஜித் அலி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் விமான நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் போலீசார் விரைந்து சென்று உயிரிழந்த சஜித் அலி உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கவுகாத்தியில் இருந்து சென்னை வந்த விமானம் மீண்டும் பெங்களுருக்கு 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.


Related Tags :

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMibmh0dHBzOi8vd3d3LmRhaWx5dGhhbnRoaS5jb20vTmV3cy9TdGF0ZS9haXItcGFzc2VuZ2VyLWRpZXMtbWlkLWFpci13aGlsZS1hcnJpdmluZy1pbi1jaGVubmFpLWZyb20tYXNzYW0tODg4MzU50gFyaHR0cHM6Ly93d3cuZGFpbHl0aGFudGhpLmNvbS9hbXAvTmV3cy9TdGF0ZS9haXItcGFzc2VuZ2VyLWRpZXMtbWlkLWFpci13aGlsZS1hcnJpdmluZy1pbi1jaGVubmFpLWZyb20tYXNzYW0tODg4MzU5?oc=5