சென்னை
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேற்று புகார் மனு அளிக்க வந்த நபர் ஒருவர் திடீரென்று பிளேடால் கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக கமிஷனர் அலுவலக பாதுகாப்பு பணி போலீசார் அவரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து வேப்பேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வேப்பேரி போலீசார் நடத்திய விசாரணையில் தற்கொலைக்கு முயன்ற நபர் புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்கிற தவக்களை (24) என்பதும், இவர் மீது கீழ்ப்பாக்கம், தலைமைசெயலக காலனி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
தற்கொலைக்கு முயன்றது ஏன்? என்பது குறித்து அவர் போலீசாரிடம் கூறுகையில், மதுவிலக்கு பிரிவு போலீசார் எனது வீட்டுக்கு வந்து, கஞ்சா விற்பவர்கள் குறித்து தகவல் கேட்டனர். எனக்கு எதுவும் தெரியாது என்றேன். அதற்கு போலீசார் என்னை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்க முயன்றனர். எனவே நியாயம் கேட்பதற்காக போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தேன். அப்போது அனைவரின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக பிளேடால் கையை அறுத்துக் கொண்டேன்’ என்று தெரிவித்தார்.
சீனிவாசன் சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMinQFodHRwczovL3d3dy5kYWlseXRoYW50aGkuY29tL05ld3MvU3RhdGUvYS1yb3dkeS1hdHRlbXB0ZWQtc3VpY2lkZS1ieS1jdXR0aW5nLWhpcy1oYW5kLXdpdGgtYS1ibGFkZS1pbi1mcm9udC1vZi10aGUtY2hlbm5haS1wb2xpY2UtY29tbWlzc2lvbmVycy1vZmZpY2UtODg4NDQ00gGhAWh0dHBzOi8vd3d3LmRhaWx5dGhhbnRoaS5jb20vYW1wL05ld3MvU3RhdGUvYS1yb3dkeS1hdHRlbXB0ZWQtc3VpY2lkZS1ieS1jdXR0aW5nLWhpcy1oYW5kLXdpdGgtYS1ibGFkZS1pbi1mcm9udC1vZi10aGUtY2hlbm5haS1wb2xpY2UtY29tbWlzc2lvbmVycy1vZmZpY2UtODg4NDQ0?oc=5