சென்னை: திருமணமான மூன்றே நாளில் புதுமாப்பிளை பலி – மதுவால் நிலைகுலைந்த குடும்பம்! – Puthiya Thalaimurai

சென்னைச் செய்திகள்

திருமணமான மூன்றே நாளில் மது போதையில் இருசக்கர வாகனத்தை ஒட்டிச்சென்ற புதுமாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். கார் ஓட்டுநரான இவருக்கு ஷோபனா என்பவருடன் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், புதுமண தம்பதியர் இருவரும் செனாய் நகரில் உள்ள ஷோபனாவின் தாயார் வீட்டுக்கு விருந்திற்காக நேற்று சென்றுள்ளனர்.

இதையடுத்து நேற்று மாலை மணிகண்டன், தனது நண்பர் வீட்டுக்கு போய் வருவதாகக் கூறி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து நண்பரை சந்தித்து விட்டு மணிகண்டன் வீடு திரும்பியுள்ளார். அப்போது செனாய் நகர் புல்லா அவன்யூ அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்து, கீழே விழுந்துள்ளார். இதில், பலத்த காயமடைந்த அவருக்கு சம்பவ இடத்திலேயே அதிகப்படியான ரத்தம் வெளியேறி இருக்கிறது.

இது குறித்த தகவல் கிடைத்த அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் படுகாயமடைந்த மணிகண்டனை உடனடியாக மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், மணிகண்டன் அளவுக்கு அதிகமான மது போதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருமணமாகி சில தினங்களே ஆன மணமக்களின் வாழ்க்கை, மது என்னும் அரக்கனின் பிடியில் சிக்கியது அக்குடும்பத்தையே நிலைகுலைய வைத்துள்ளது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiiAFodHRwczovL3d3dy5wdXRoaXlhdGhhbGFpbXVyYWkuY29tL25ld3N2aWV3LzE1NDczNy9OZXdseS1tYXJyaWVkLW1hbi1kaWVkLWluLWEtcm9hZC1hY2NpZGVudC10aHJlZS1kYXlzLWFmdGVyLW1hcnJpYWdlLW9uZHJpbmstYW5kLWRyaXZl0gGMAWh0dHBzOi8vd3d3LnB1dGhpeWF0aGFsYWltdXJhaS5jb20vYW1wL2FydGljbGUvMTU0NzM3L05ld2x5LW1hcnJpZWQtbWFuLWRpZWQtaW4tYS1yb2FkLWFjY2lkZW50LXRocmVlLWRheXMtYWZ0ZXItbWFycmlhZ2Utb24tZHJpbmstYW5kLWRyaXZl?oc=5