சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் கீழ், கலை, அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும், ஆசிரியர்கள் மேம்பாட்டு திட்டத்தின் துவக்க விழா சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. பல்கலைக்கழக துணை வேந்தர் கவுரி தொடங்கி வைத்தார். பேராசிரியர்கள் தங்களின் திறனை மேலும் வளர்த்து கொண்டு மாணவர்களுக்கு சிறந்த முறையில் கல்வி கற்பிக்க இந்த நிகழ்ச்சி உதவும் என்றும், பிப்.10ம் தேதி வரை 2 கட்டங்களாக இந்த பயிற்சி அளிக்கும் நிகழ்வு சென்னை பல்கலைக்கழக வளாகத்திலேயே நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் கல்லூரி கல்வி இயக்குநர் ஈஸ்வர மூர்த்தி, நான் முதல்வன் திட்ட நிகழ்ச்சி மேலாளர் சிங்கதேவன், சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ஏழுமலை, பல்கலைக்கழக நான் முதல்வன் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவிசந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் கவுரி கூறியதாவது: நான் முதல்வன் திட்டம் மற்ற மாநிலங்கள் வியந்து பார்க்கும் புதுமையான திட்டம். மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை சிரமமின்றி பெற என்ன தேவை என்பதை அறிந்து அடிப்படை திறமைகளை மேம்படுத்தி, வழக்கமான பாடத்திட்டங்களோடு சேர்த்து புதிய பிரிவுகள், புது விதமாக பயிற்சிகள் வழங்கப்படும்.
கலை, அறிவியல் பல்கலைக்கழகங்கள் பல இருக்கின்றன. ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் பாடத்திட்டம் மாறுபடும், அவர்களை ஒன்றிணைத்து வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. அடிப்படை பாடத்திட்டத்துடன் கூடுதலாக தொழில்நுட்பம், திறன் மேம்படுத்தல் உள்ளிட்டவற்றை மாணவர்கள் கற்கும் போது அவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகமாகும். இதற்கான பயிற்சியும், பாடத்திடத்தையும், வேலைவாய்ப்பை அளிக்கும் நிறுவனங்கள் மூலம் வழங்கப்படுகிறது. பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் மூலம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
ஆசிரியர்கள் பாடத்திட்டத்தை மட்டும் பேசாமல் தத்துவங்கள், நகைச்சுவை ஆகியவை சேர்த்து மாணவர்களுக்கு சோர்வு ஏற்படாமல் பாடம் எடுக்க வேண்டும். கற்பிக்கும் முறையை இன்றைய தொழில்நுட்பத்துடன் சேர்பது என்பதே இந்த நிகழ்வின் முக்கிய அம்சம். இந்த திட்டம் நிச்சயம் பயன் தரும். அனைத்து துறைகளுக்கும் இந்த திட்டம் சென்றடைய வேண்டும். சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளை சேர்ந்த 370 ஆசிரியர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
ஆசிரியர் என்பவர் ஒரு நிரந்தர மாணவன். தொடர்ந்து வளர்ச்சிகள் இருப்பதால் அவர்கள் எப்போதும் கற்க வேண்டும். இளம் ஆசிரியர்கள் மிக ஆர்வமாக அதிகம் கற்க வேண்டும், புதுமையாக கற்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் வந்துள்ளனர். இந்த கல்வியாண்டியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு இந்த திட்டம் சேர விரைவாக பணிகள் நடைபெற்று வருகிறது, என்றார்.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MzQ3MjPSAQA?oc=5